Posts Tagged ‘நாட்டுப்பற்றை ஊட்டுதல்’

இந்து ஆன்மிக மற்றும் சேவைகள் கண்காட்சி 2020 மற்றும் பாரதிய இதிகாச சங்கலன சமிதி [1]

பிப்ரவரி 7, 2020

இந்து ஆன்மிக மற்றும் சேவைகள் கண்காட்சி 2020 மற்றும் பாரதிய இதிகாச சங்கலன சமிதி [1]

HSSF 2020 kannagi-revering womanhood

2009 முதல் 2020 வரை வளர்ந்த கண்காட்சி: தமிழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆன்மிகம் சார்ந்த ஒரே கண்காட்சி என்ற பெருமையைக் கொண்டது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி. கடந்த 2009- ஆம் ஆண்டு சென்னையில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்தக் கண்காட்சி, படிப்படியாக வளா்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது[1]. இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்தி வருகின்றனா்.

  1. வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல்,
  2. சுற்றுச்சூழலை பராமரித்தல்,
  3. ஜீவராசிகளைப் பேணுதல்,
  4. பெற்றோர், பெரியோர் மற்றும் ஆசிரியா்களை வணங்குதல்,
  5. பெண்மையைப் போற்றுதல்,
  6. நாட்டுப்பற்றை ஊட்டுதல்

ஆகிய ஆறு கருத்துக்களை முன்வைத்து, ஆறு நாள்கள் நடைபெற்று வரும் கண்காட்சியை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டனா்[2]. ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முன்னிட்டு, பள்ளி மாணவா்களுக்கு ஒளவையார் பாடல், பாரதியார் பாடல், போன்ற பாடல்கள் ஒப்புவிக்கும் போட்டிகள், கில்லி, கோலி போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் சிலம்பம், மல்லா் கம்பம், போன்ற சாகச விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இறுதிப் போட்டிகள் கண்காட்சி வளாகத்தில் நடைபெற்று பரிசுகள் வழங்கப் பட்டன..

HSSF 2020 kannagi

பெண்மையினை போற்றுவோம்: பத்தினி தெய்வமான கண்ணகியைக் கண்காட்சியின் அடையாளச் சின்னமாக வைத்துள்ளனர்[3]. இதற்காகக் கண்காட்சி அரங்கத்தின் முன்பு கண்ணகிக்கு பிரமாண்டமாக சிலை வைக்கப்பட்டுள்ளது[4].  அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ள “பெண்மையை போற்றுவோம்” [Revering womanhood] என்ற தொகுப்புப் புத்தகம், மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எப்படி வேதகாலத்திலிருந்து, பெண்மை மேம்பட்டிருந்தது என்பதனை உதாரணங்களுடன் விளக்கப்பட்டன. அதிதி, பிரம்மி, அப்சரஸ், மத்ஸ்யகந்தி, ஊர்மிளா, மணிமேகலை,  கேளடி சென்னம்மா, ராணி துர்காவதி, சாவித்ரி பூலே, லுத்பன்னிஸா இம்தியாஸ், சுபத்ரா குமாரி சௌஹான், க்ன்ஹோபாத்ரா, சத்யபாமா, சுடலா-யோகினி, பிரதிமா தேவி, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, கங்குபாய் ஹங்கால் என்று பல துறைகளில் சிறந்த பெண்மணிகள் குறிப்பிடப்பட்டனர்.

Goddesses of various temples

ஆறு மையக் கருத்துகளை போற்ற நடந்த நிகழ்ச்சிகள்: இந்தக் கண்காட்சியில் பெருமளவில் மக்களை வரவழைப்பதற்காகவும், கண்காட்சியின் பின்ணணியில் உள்ள தத்துவங்களைப் பரப்புவதற்காகவும் பல்வேறு முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பிரமாண்ட யோகாசனப் பயிற்சி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கோவை ஓசோன் யோகா மைய நிறுவனரும் 98 வயதிலும் யோகாசன பயிற்சி அளித்து வந்த நானம்மாள் மகனுமான பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். ஹிந்து ஆன்மிக கண்காட்சியின் ஆறு கருத்துகளின் அடிப்படையில் யோகாசனங்கள் நிகழ்த்தப்பட்டன. வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல் என்ற கருத்தை முன்வைத்து சமஸ்திதி ஆசனம் எனப்படும் உடலை ஒரே நிலையில் வைத்திருக்கும் வகையில் 5 ஆசனங்கள் செய்யப்பட்டன.  மரத்தைக் குறிக்கும் வகையில் விருக்ஷ ஆசனம், கருடப் பறவையைக் குறிக்கும் வகையில் கருடாசனம் மற்றும் புஜங்காசனம், மர்ஜர்யாசனம், வியாகராசனம் ஆகியவை நிகழ்த்தப்பட்டன. ஜீவராசிகளைப் பேணுதல் என்ற கருத்தை முன் வைத்து தோப்புக்கரணம், திரியக்க தடாசனம், கஜாசனம் மற்றும் கோமுகாசனம் ஆகிய ஆசனங்களை மாணவர்கள் செய்தனர். சுற்றுச்சூழலைப் பராமரித்தல் என்ற கருத்தில் பாத ஹஸ்தாசனம், மத்ஸ்யாசனம் மற்றும் மக்ராசனம் ஆகியப் பயிற்சிகள் நிகழ்த்தப்பட்டன.  பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதல் என்ற கருத்தை முன் வைத்து பிரணமாசனம், சஷாங்காசனம் மற்றும் சாஷ்டாங்க நமஸ்காரம் ஆகிய யோகங்கள் பயிலப்பட்டன. பெண்மையைப் போற்றுதல் என்ற கருத்தில் திரிகோணாசனம், தித்தளியாசனம், சித்தி யோனியாசனம் ஆகியப் பயிற்சிகள் நிகழ்ந்தன.

Stalls, general view

500க்கும் மேற்பட்ட அரங்குகள்: நாட்டின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் சேவையை எடுத்துக்காட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்து ஆன்மீக கண்காட்சி சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 11ஆவது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில், சத்குரு ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி 28-01-2020 அன்று தொடங்கி வைத்தார்[5]. பிப்ரவரி 3ஆம் தேதி வரை ஆறு நாட்கள் இந்த கண்காட்சி நடைபெற்றது. தினமும் காலை 9 மணி முதல், இரவு 9 மணி வரை கண்காட்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பெண்மையைப் போற்றுதல், வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கருத்துக்களையும் இந்த கண்காட்சி முன்வைத்தது[6].அனைத்து தரப்பு மக்களின் குடும்பம், ஆரோக்கியம், செல்வம் உள்ளிட்டவை செழிக்க வேள்விகள், தெருக்கூத்துகள், நாடகங்கள், ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்றன[7].

Spiritual or otherwise phone is important

இந்திய ராணுவ வீரர்கள் போற்றப் பட்டது: இறுதி நாளான 03-02-2020 அன்று, இந்து ஆன்மிகத்தில் புதைந்துள்ள ஆறு நற்பண்புகளில் ஒன்றான ‘நாட்டுப்பற்றை வளர்த்தல்- பாரதமாதா, பரம்வீர் வந்தனம்’ என்ற தலைப்பில் தேசப்பற்றை மாணவர்களுக்கு ஊட்டும் வகையில் ராணுவ வீரர்களைப் போற்றி வணங்கும் நிகழ்ச்சி நடந்தது[8]. இதில் புகழ்பெற்ற விமானப்படை வீரர் அபிநந்தனின் தந்தை ஏர்மார்ஷல் வர்தமான், முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால் சாமி, மேஜர் ஜெனரல் முரளி கோபாலகிருஷ்ணன், கமாண்டர் டி.ஹரி ஆகியோர் ராணுவத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். தாய்நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த 21 ராணுவ வீரர்களின் படங்கள் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு வீரரின் பெயர் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டதும் பிரமாண்ட எல்.இ.டி. திரையில் அந்த வீரரின் படமும் அவர் எந்த போரில் ஈடுபட்டார் என்ற விவரமும் வெளியானது. அப்போது ராணுவ உடையணிந்த மாணவர்கள் மறைந்த வீரர்களின் படங்களுக்கு முன்பு மரியாதை செலுத்தினர். தேசிய மாணவர் படையினர் அணிவகுத்து வந்து மரியாதை செலுத்தினார்கள். பரம்வீர் சக்ரா குறித்து குறும்படமும் திரையிடப்பட்டது.

03-02-2029 Srinivasa Kalyanam

03-02-2020 அன்று ஶ்ரீனிவாச கல்யாணத்துடன் கண்காட்சி முடிந்தது: பாரத கலா மந்திர் சார்பில் நாட்டியாஞ்சலி, இளைஞர்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்பற்றை வளர்த்தல், பெண்களை போற்றும் கள்ளர்களின் வாழ்வியல் முறை நிகழ்ச்சிகள் நடந்தது. கோவையில் இருந்து வந்திருந்த ஆதியோகி ரதம், ஆந்திர மாநிலத்தில் உள்ள காணிப்பாக்கம் விநாயகர் கோவில் ரதம் உள்ளிட்ட கோவில் ரதங்களை பார்வையிட்டனர். கண்காட்சியில் 03-02-2020 அன்று, மாலை 6.15 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திருமலையில் இருந்து ஸ்ரீசீனிவாச பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சிலைகள் கொண்டு வரப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாமசங்கீர்த்தனம், விஸ்வசேன ஆராதனம், புண்ணியாகவாசனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. அவ்வப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ‘கோவிந்தா கோவிந்தா’ என்று முழக்கமிட்டனர். நிறைவு நாளானநேற்று 2 லட்சம் பேர் கண்காட்சியை பார்வையிட்டனர். சென்னையில் கடந்த ஆறு நாட்கள் நடந்த இந்து ஆன்மிக கண்காட்சியில் மொத்தம் 18 லட்சம் பேர் பார்வையிட்டனர் என்று அறங்காவலர் ஆர்.ராஜலட்சுமி கூறினார்[9]. நிகழ்ச்சியில் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ராஜலட்சுமி, தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கோவிலின் உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி, குழு உறுப்பினர் பி.வி.ஆர்.கிருஷ்ண ராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்[10].

03-02-2029 Srinivasa Kalyanam-audience

கண்காட்சியை தடுக்க நடந்த சதிகள்: கனிமொழி போன்றோர் இந்துவிரோத தோரணையில் பேசியது நினைவில் கொள்ள வேண்டும்[11]. “ஆசிரியர்கள் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். அவர்கள் மாணவர்களின் எதிர் காலத்தை மேம்படுத்த உழைக்கின்றனர். ஆனால் சென்னையில், இந்து மதவாத அமைப்புகள் ஒரு கண்காட்சியை நடத்துகின்றன. அதில் 1800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். அந்நிகழ்ச் சியின் தொகுப்பினை, பள்ளிக் குழந்தைகள் பார்க்குமாறு கட்டாயப் படுத்தப்படுகின்றனர். பூஜைகள் செய்யுமாறு வற்புறுத்தப்படுகின்றனர். இது புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே’’, இவ்வாறு அவர் பேசினார்[12]. சென்னையில் நடைபெறும் இந்து ஆன்மிக கண்காட்சியை தடைசெய்ய வேண்டுமென காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை மீனம்பாக்கம் தனியார் கல்லூரியில் இந்து ஆன்மிக கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சிக்கு தடைவிதிக்க கோரி இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது[13]. இதனை அக்கட்சி தலைவர் தடா ரஹீம் கொடுத்தார். இந்து ஆன்மீக கண்காட்சியில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை பற்றி தவறான கருத்துகள் பரப்புரை செய்யப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது[14]. இவற்றை எல்லாம் மீறித்தான் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.

© வேதபிரகாஷ்

07-02-2020

HSSF 2020 kannagi-WIN tv

[1] தினமணி, நாளை முதல் 6 நாள்கள் ஹிந்து ஆன்மிகசேவை கண்காட்சி, Published on : 28th January 2020 11:09 AM

[2] http://dinamani.com/religion/religion-news/2020/jan/28/11th-hindu-spiritual-and-science-fair-2020-at-guru-nanak-college-3342755.html

[3] விகடன், கண்ணகிக்கு பிரமாண்ட சிலை; 6 மையக் கருத்துகள்!’- சென்னையில் 11-வது இந்து ஆன்மிக கண்காட்சி, ராம் சங்கர் ச, பிரியங்கா.ப, Published:29 Jan 2020 12 PMUpdated:29 Jan 2020 12 PM

[4] http://vikatan.com/news/tamilnadu/11th-hindu-spiritual-exhibition-starts-in-chennai

[5] தினத்தந்தி, 11வது இந்து ஆன்மீக கண்காட்சி : “பிப்.3-ம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்,” பதிவு : ஜனவரி 29, 2020, 09:38 AM.

[6] http://thanthitv.com/News/TamilNadu/2020/01/29093843/1066579/11th-Hindu-Spiritual-Services-Fair2020.vpf

[7] தி.இந்து, 11-வது இந்து ஆன்மிக, சேவை கண்காட்சி நிறைவு: 18 லட்சம் பக்தர்கள் பார்வையிட்டனர், Published : 04 Feb 2020 07:29 AM, Last Updated : 04 Feb 2020 07:29 AM

[8] http://hindutamil.in/news/tamilnadu/537914-hindu-religious-service-exhibition.html

[9] தினத்தந்தி, சென்னையில் 6 நாட்களாக நடைபெற்ற இந்து ஆன்மிக கண்காட்சியை 18 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர், பதிவு: பிப்ரவரி 04,  2020 04:30 AM

[10] http://dailythanthi.com/News/State/2020/02/04040830/18-lakhs-have-visited-the-Hindu-Spiritual-Exhibition.vpf.

[11] வேதபிரகாஷ், இந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் பள்ளி மாணவர்களைப் பாத பூஜை செய்ய வைப்பது சரியா?, ஆகஸ்ட்.10, 2016.

[12] http://dravidianatheism2.wordpress.com/2016/08/10/hindu-spiritual-and-services-fair-kanimozhi-questioning-pada-puja/

[13] நியூஸ்.7, தனியார் கல்லூரியில் இந்து ஆன்மீகக் கண்காட்சி: தடைசெய்யக் கோருகிறார் தடா ரஹீம், August 04, 20, Posted By : Guna

[14] http://ns7.tv/index.php/ta/node/284715