பித்துக்குளி முருகதாஸ் [1920-2015]

பித்துக்குளி முருகதாஸ் [1920-2015]

Pithukuli murugadas palying harmonium - old photo.4பிரபல பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் (95) உடல்நலக்குறைவால் சென்னையில் 17-11-2015 [செவ்வாய்கிழமை] அன்று காலமானார்[1]. இன்றைய நாட்களில் அமைதியாக தொண்டாற்றி வரும் பெரியவர்களைப் பற்றிய விவரங்கள் ஊடகங்களில் வருவதில்லை. உதாரணத்திற்கு இவரையே எடுத்துக் கொண்டால், இவர் ஒரு ஆன்மீகவாதி, சுதந்திர போராட்ட வீரர், உப்புசத்தியாகிரகத்தில் பங்கு கொண்டவர், சிறைக்குச் சென்றவர் என்பதெல்லாம் நிறைய பேருக்குத் தெரியாது. எம்.பில், பி.எச்டி ஆய்வுக்கு கண்டவர்களைப் பற்றியல்லாம் ஆராய்ச்சி செய்பவர்கள், இவர் போன்றவர்களைப் பற்றி ஆராய மாட்டார்கள். இந்திய விடுதலை போர் பற்றி ஏகப்பட்ட கருத்தரங்கங்கள், கூட்டங்கள் நடந்தாலும், அங்கெல்லாம் கூட இவரைப் பற்றி மூச்சுக் கூட விடமாட்டார்கள். கோவையில் 1920ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூசத் திருநாளில் பிறந்தார்[2].  இவர் தனது தாத்தா கோபாலகிருஷ்ண பாகவதரிடம் சங்கீதம் பயின்றார்[3]. ஊத்துக்காடு வேங்கட சுப்பைய்யர் இயற்றிய பாடல்களை பாடியபோது, இவர் மற்றவர்களால் கவனிக்கப்பட்டார்[4].

Pithukuli murugadas old photoபக்திப்பாடல்களால் கோடானு கொடி மக்களைக் கவர்ந்தவர்: 1947-ல் தனது இசைப் பயணத்தை தொடங்கிய பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயருடன் பிறந்த பித்துக்குளி முருகதாஸ், தமிழ்க் கடவுளான முருகன் மீது நெஞ்சை உருக்கும் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளார். இவரது கணீர் என்ற குரல், ஹார்மோனியத்துடன் இணையும் போது, இரண்டிற்கும் வித்தியாசமே தெரியாத அளவிற்கு இருக்கும். அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல் வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு போன்ற பாடல்களைப் பாடி பிரபலப்படுத்தினார்[5]. தலையில் காவித்தலைப்பாகை உடுத்தி, முகத்தில் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து சற்றே வித்தியாசமான முருக பக்தராக காட்சியளித்த பித்துக்குளி முருகதாஸ், கந்தர் அனுபூதி உள்பட முருகன் மீது பல பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார்[6]. கண்ணன் மீதான பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். திரைப்படங்களிலும் சில பக்தி பாடல்கள் பாடியுள்ளார்[7]. அவர் பாடிய ‘அலைபாயுதே கண்ணா’ மற்றும் தெய்வம் திரைப்படத்தில் வரும் ‘நாடறியும் நூறு மலை’ பாடல்கள் மிகவும் பிரபலமானவை[8].

Pithukuli Murugadas - Swami sivananda centenary - 08-11-1987சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டது, சிறைசென்றது: அக்காலகட்டத்தில், சுதந்திர போராட்டம் நாடு முழுவதும் பரவியிருந்ததால், சிறுவர் முதல், முதியோர் வரை அதில் கலந்து கொண்டனர். அவ்வாறே பாலசுப்ரமணியும் 1931ல் தனது பதினொன்றாம் வயதில் உப்பு சத்தியாகிரகத்தில் பங்குக் கொண்டு சில நாட்கள் சிறையிலும் இருந்தார்[9]. இந்தியாவில் வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற இவர்மீது 1936-ம் ஆண்டு போலீசார் நடத்திய முரட்டுத்தனமான தாக்குதலில் பித்துக்குளி முருகதாசின் இடதுகண் பார்வை பறிபோனது. அப்பொழுதும் ஆறு மாதம் சிறைவாசம் இடைத்தது. அதிலிருந்து இவர் கருப்பு கண்ணாடி அணியத் தொடங்கினார். பிறகு, மைசூர் மஹாராஜா ஜெயசாமராஜேந்திர உடையார் திருமணத்தின் போது, கைதிகள் விடுவிக்கப்பட்டபோது, இவரும் விடுதலை ஆனார். இன்றைக்கு எதற்கோ சிறை சென்றவர்கள் எல்லாம், ஏதோ பெரிய போராளிகள் போல சித்தரிக்கப் படுகிறார்கள். ஆனால், உண்மையான போராளிகள் மறைக்கப்படுகிறார்கள்; மறக்கப்படுகிறார்கள்; இதனால், இக்காலத்தவர், குறிப்பாக இளைஞர்கள் உண்மை அறியாமலேயே, தங்களது ஞானத்தை வளர்த்து-வைத்துக் கொள்கிறார்கள்.

Pithukuli Murugadas - at the end of a concert in 1996பாலசுப்ரமணியம் பித்துக்குளி ஆனது: சிறுவயதில், தனது ஊரின் தெருவில் விளையாடும் போது, வழியே சென்ற ஒருவர் மீது இவர் வீசிய கல் பட்டு காயமடைந்த பெருமாள் பக்தரும், மகா ஞானியுமான பிரம்மானந்த பரதேசியார், தனது நெற்றியில் இருந்து இரத்தம் வடிய… ‘அடேய்நீ என்ன பித்துக்குளியா? (பைத்தியமா)? ஒருநாள் இல்லை ஒருநாள், என்னைப் போலவே நீயும் ஆகப் போகிறாய்என்று வேடிக்கையாக கூறவே, அதுவே பித்துக்குளி முருகதாஸ் ஆக நிலைத்துவிட்டது[10]. முருகனுக்கு தாசனாய், முருகன் மீது பைத்தியமாய் இருப்பதால் தனது பெயருக்கு முன்னால் ‘பித்துக்குளி’யை இவர் சேர்த்துக்கொண்டார். 1935ல் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடித் துறவறத்தில் மூழ்கினார். பிரம்மானந்த பரதேசியார் என்ற துறவி இவருக்கு பித்துக்குளி என்ற பெயர் சூட்டினார். 1939ல் பின்னாளில், கேரள மாநிலத்தில் உள்ள ஆனந்த ஆசிரமத்தின் ஆன்மீக குரு சுவாமி ராமதாஸ் முருகதாஸ் என்ற பெயரை பித்துக்குளி என்ற நாமத்துடன் இணைத்தார். அன்று முதல் பித்துக்குளி முருகதாஸ் என்றே அழைக்கப்படுகிறார்[11]. 1940ல் சேந்தமங்கலத்தில் இருந்த சுவாமி ஸ்வயம் பிரகாஷ் என்ற அவதூதரிடம் இருந்தார். பிறகு கால்நடையாகவே தீர்த்தயாத்திரையாக பல இடங்களுக்குச் சென்று வந்தார். சுதந்திர போராட்ட எண்ணங்களினாலும், தான் சிறு வயதில் பட்ட கஷ்டங்களினாலும் குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் அனாதை குழந்தைகளை காக்க வேண்டும் என்று தீர்மானித்தார். 1947ல் வாலாஜாபேட்டையில் உள்ள தீனபந்து ஆஸ்ரமத்தின் / அனாதை இல்லத்தின் பாதுகாவலர்களுள் ஒருவரானார்[12].

Pithukuli Murugadas in a Kumbabhishekam in Singaporeதமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்த இவர், சந்தப்பத்திற்கு ஏற்றவகையில் பாடல்களை புனைந்து பாட வல்லவர். தென்னாப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ளார்[13]. பித்துக்குளி முருகதாஸ் தியாகராஜர் விருது, 1984ல் தமிழக அரசின் கலைமாமணி, சங்கீத சாம்ராட், தியாகராஜர் விருது உள்ளிட்ட பல இசை விருதுகளை பெற்றுள்ளார்[14]. தன்னுடன் கச்சேரிகளில் பக்திப்பாடல்களை பாடிய தேவி சரோஜா என்பவரை 1978ல் தனது அறுபதாவது வயதில் மணந்து கொண்டார். இந்த தம்பதியர் ராதா கல்யாணம் பாடல்களை எல்லாம் பாடிப் பிரபலம் ஆக்கினர்! இவர் 2011ல் காலமானார். சிறந்த முருகபக்தராக கருதப்படும் பித்துக்குளி முருகதாஸ், சென்னையை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீ ஜோதிர் மாயா தேவி அறக்கட்டளையை தொடங்கினார். தனது பக்தி பாடல் கச்சேரிகளின் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து பல ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் மிக உயரிய சமூகத்தொண்டாற்றி வந்தார். வெகுநாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தீவிர முருகபக்தரான பித்துக்குளி முருகதாஸ், சூரசம்ஹார தினமான 17-11-2015 [செவ்வாய்கிழமை] அன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அதிகாலை மரணமடைந்தார்[15].

© வேதபிரகாஷ்

17-11-2015

[1] மாலைமலர், பிரபல பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார், பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17, 12:20 PM IST.

[2]  தினமலர், பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார், நவம்பர்.17, 2015: 07.24.

[3] தி.இந்து, பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார், Published: November 17, 2015 11:17 ISTUpdated: November 17, 2015 11:17 IST.

[4] http://www.thehindu.com/news/national/tamil-nadu/singer-pithukuli-murugadas-passes-away/article7886850.ece

[5] http://www.newindianexpress.com/cities/chennai/Devotional-Singer-Pithukuli-Murugadas-Passes-Away/2015/11/17/article3132653.ece

[6] தமிழ்.ஒன்.இந்தியா, தைபூசத்தில் பிறந்து கந்த சஷ்டியில் காலமானார் முருக பக்தி பாடகர் பித்துக்குளி முருகதாஸ், Posted by: Mayura Akilan Updated: Tuesday, November 17, 2015, 10:25 [IST].

[7] http://www.vikatan.com/news/article.php?aid=55136

[8] http://ns7.tv/ta/singer-pithukuli-murugadas-passes-away.html

[9] https://en.wikipedia.org/wiki/Pithukuli_Murugadas

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/singer-pithukuli-murugadas-passes-away-239986.html#slide175317

[11]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article7886986.ece

[12] http://www.pithukulimurugadas.com/

[13] விகடன், முருகன் பக்தி பாடல் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்!, Posted Date : 08:52 (17/11/2015); Last updated : 08:52 (17/11/2015).

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1388839&

[15] http://www.maalaimalar.com/2015/11/17122010/Devotional-singer-Pithukkulli.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக