கீழடி – பற்பல நிபுணத்துவ சர்ச்சைகள், பேரினவாத பிடிவாதங்கள், மற்றும் மேடை முரண்பாடுகள் அதிகரிப்பது ஏன்? [1]

கீழடிபற்பல நிபுணத்துவ சர்ச்சைகள், பேரினவாத பிடிவாதங்கள், மற்றும் மேடை முரண்பாடுகள் அதிகரிப்பது ஏன்? [1]

Keeladi TN report 2019

2017-2018லேயே அரசியலாக்கப் பட்ட கீழடி: மதுரை ஐகோர்ட்டில், மதுரை மீனாட்சிநகரை சேர்ந்த பிரபாகர் பாண்டியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது[1]: “தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், மதுரையை அடுத்த கீழடி பகுதியில் அகழாய்வில் ஈடுபட்டனர். இதில் அங்கு பழங்கால நகரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தகட்ட அகழாய்வுக்கு தயாராகி வந்த நேரத்தில், அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாம் மாநில தொல்லியல் துறைக்கு இடமாற்றம் செய்து கடந்த ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. அடுத்த கட்ட ஆய்வில் தற்போது வேறொரு அதிகாரி ஈடுபட்டுள்ளார். முதல் 2 கட்ட ஆய்வு அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரித்து வருகிறார். இதற்கிடையே ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் தயார் செய்யக்கூடாது என்றும், அந்த அறிக்கையை பெங்களூரு தொல்லியல் துறை சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர்தான் தயார் செய்ய வேண்டும் என்றும் கடந்த 3–ந்தேதி மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டு உள்ளது. அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதில் உள்நோக்கம் இருக்கிறது. எனவே தமிழ் கலாசாரத்தின் பழமையை மறைக்கும் நோக்கத்தில் சில அதிகாரிகளின் துணையுடன் மத்திய அரசு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எனவே கீழடி அகழாய்வு அறிக்கை தயாரிக்க பெங்களூரு தொல்லியல் துறை சூப்பிரண்டுவை நியமித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன்தான் தயார் செய்ய வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்[2].

Daily Thanthi news, court case- Keeladi
தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  பதில் மனு[3]:  இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, கீழடியின் முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.வ்இந்தநிலையில் அந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொல்லியல் துறையின் தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: “கீழடி அகழாய்வில் ஈடுபட்டிருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அரசு இடமாறுதல் விதிப்படி, அசாம் மாநிலம் கவுகாத்திக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதில் எந்த விதிமீறலும் இல்லை. தொல்லியல் துறைக்கு அரசியல் நோக்கமோ, மதம் சார்ந்த கொள்கை, கோட்பாடோ கிடையாது. அகழாய்வுப்பணிகள் கடந்த 2014 முதல் 2017–ம் ஆண்டு வரை 3 கட்டங்களாக நடந்தது. 4–வது கட்ட அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட அலுவலரும் தொல்லியல் ஆராய்ச்சி வல்லுனர். எனவே, அமர்நாத்துக்கு இணையாக அவரும் திறம்பட அகழ்வாய்வு பணிகளை எவ்வித பேதமும் இல்லாமல் மேற்கொள்வார். அத்துடன், அவர் ஏற்கனவே அமர்நாத் மூலம் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கையை ஆவணப்படுத்தும் பணியை மட்டுமே மேற்கொண்டு வருகிறார். அமர்நாத் மேற்கொண்ட அகழாய்வு பணிகள் குறித்த தொழில்நுட்ப அறிக்கைகளை அசாமில் இருந்தவாறு, குறிப்பிட்ட காலத்துக்குள் அவர் தயாரித்து அனுப்புவார். இந்த ஆய்வு குறித்த இறுதி அறிக்கையையும் ஐகோர்ட்டு உத்தரவுப்படி, அவரே தயாரித்து அனுப்புவார். வைகை ஆற்றங்கரை பகுதியில் தொல்லியல் சின்னங்கள் குறித்த மனுதாரரின் தகவல்கள் உண்மைதான். ஆனால், எங்களுக்கு கீழடியில் மட்டுமே அகழாய்வு செய்ய அரசு அனுமதி கிடைத்துள்ளது. கீழடியில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தின் முதல் நகர்ப்புற நாகரிகம் என்பதற்கான உறுதியான முழுமையான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. அகழாய்வில் கிடைத்த அனைத்து பொருட்களையும் வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் கார்பன் சோதனை செய்வது இயலாத காரியமாகும். ஏற்கனவே, கிடைத்த தொல்பொருட்களை அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி பாதுகாத்து வருகிறோம்,” இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது[4].

Keeladi TN Court 2017
நிதிமன்றத்தின் உத்தரவு[5]: இந்த வழக்கின் விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவர் ஆய்வு அறிக்கை தயாரிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை கார்பன்டேட்டிங் சோதனைக்கு உட்படுத்தியபோது அவை 2,218 ஆண்டுகளுக்கு முந்தையவை என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஆய்வு முடிவு இந்திய வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இந்த வழக்கை இத்துடன் முடிக்க நாங்கள் விரும்பவில்லை. கீழடி தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து அடுத்த விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். கார்பன்டேட்டிங் சோதனை முடிவை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு அந்த சோதனை அறிக்கை அடிப்படையில் தற்போது நடைபெற்று வரும் அகழாய்வில் கிடைக்கும் தகவல்களுடன் ஒப்பிட்டு ஒருங்கிணைந்த அறிக்கை ஒன்றை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்,” இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்[6].

IATR, Chicago conference

தீவிர தமிழ்சார்பு, பேரினவாதிகளின் பிரச்சாரம், தாக்கம் முதலியன: அகழ்வாய்வு போன்றவை, சாதாரணமாக நடந்து வருகின்றன. பிறகு, இதற்கு எதற்கு நீதிமன்றம்? அதாவது, இந்த அளவுக்கு நீதிமன்றம் அகழ்வாய்வு சமாசாரங்களில் நுழைந்திருப்பது வியப்பாக இருக்கிறது. இப்பொழுது, கீழடி பற்றி, பலர், பலவிதமாக பேசி வருகின்றனர். சம்பந்தப் பட்டவர்களே, மேடைக்கு மேடை, டிவி செனலுக்கு செனல் மாறி, மாற்றிப் பேசி வருகின்றனர். இவர்களை என்ன செய்ய முடியும்? சரித்திர ஆதாரம் இல்லாமல், அமர்நாத், பாலகிருஷ்ணன், மற்றும் அந்நிய ஆராய்ச்சியாளர்கள் சுபாஷிணி, நாராயணன் போன்றோர் உணர்ச்சி பீறல்களுடன், என்னென்னமோ சொல்லி வருகின்றனர்! கேட்டால் ஆதாரங்கள் எல்லாம் கொடுக்கத் தேவையில்லை / நான் எழுதுவதையெல்லாம் மெய்ப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் ஒருவர் கூறுகிறார். ஆனால், இவர்கள் உலகம் முழுவதும் சென்று, எல்லாமே தமிழ் தான் என்று பேசி வருகிறார்கள்! பிறகு அகழ்வாய்வு, ஆராய்ச்சி, ஆதாரங்கள் எல்லாம் தேவையில்லையே. காவிரிபூம்பட்டினத்தில் அகழ்வாய்வு தேவையில்லை என்று கருணாநிதி சொன்னது போன்று[7], சொல்லி விடலாமே, நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லையே. இருப்பினும், “குமரிக் கண்டம்” வரை இழுக்கிறார்கள்.

Propagating for tamizhi

ஜூலை-3rd to 7th 2019: 10-ஆம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகருத்தரங்கம் IATR [International Association of Tamil Research ] World Tamil Conference: பத்தாவது மாநாடு 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 முதல் 7 வரை அமெரிக்காவில் சிக்காகோ நகரில் நடைபெற்றது[8]. மாநாட்டிற்கு தமிழக அரசிடமிருந்து நிதி உதவி அளிக்கப் பட்டது. தமிழக அரசின் சார்பாக, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத்துறை அமைச்சர் திரு. மாஃபா. கே. பாண்டியராஜன் அவருடைய குழுவுடன் சிகாகோ சென்றார். அவருடன் யார் சென்றார்கள் என்று தெரியவில்லை. அதிலேயே, அரசியல் ரீதியில் கருத்துத் தெரிவிக்கப் பட்டது[9], “கீழடியில் இருந்து இதுவரை சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல். ஆனால், அவற்றில் ஏழு பொருட்கள் மட்டுமே இதுவரை மேலை நாடுகளில் கார்பன்-14 பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அதில் இரண்டு பொருட்களின் காலம் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்னையது என்பதை உறுதிசெய்யப்பட்டுள்ளது. [அதாவது 200 BCE என்றாகிறது] அரசியல் அழுத்தங்களினால் கீழடி அகழாராய்ச்சி முற்றிலும் நிறுத்தப்பட்டு இப்பொழுது சென்னை நீதிமன்ற ஆணைக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டாலும், இந்திய நடுவண் அரசின் ஒப்புதல் கிட்டாமையால் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படாமல் தாமதப்படுத்தப்படுகின்றன. மொத்தத்தில் கீழடி ஆராய்ச்சி முறையாக நடத்தப்பட்டால் தமிழர் வரலாறு எவ்வளவு பழமையானது எனத் தெரிய வரும்.”

© வேதபிரகாஷ்

12-10-2019

Keeladi TN Court 2017-report by Pandiarajan-wrapper

[1] தினத்தந்தி, கீழடி அகழாய்வு முடிவுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர், பதிவு: நவம்பர் 01, 2018 04:41 AM

[2]  https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/11/01044157/Excavating-kilati-results–Will-have-a-huge-impact.vpf

[3] தினத்தந்தி, கீழடி அகழாய்வு முடிவுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர், பதிவு: நவம்பர் 01, 2018 04:41 AM

[4]  https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/11/01044157/Excavating-kilati-results–Will-have-a-huge-impact.vpf

[5] தினத்தந்தி, கீழடி அகழாய்வு முடிவுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர், பதிவு: நவம்பர் 01, 2018 04:41 AM

[6] https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/11/01044157/Excavating-kilati-results–Will-have-a-huge-impact.vpf

[7] எஸ்.ஆர்.ராவ், அகழ்வாய்வு செய்து, புத்தர் சிலை, கட்டிட சுவர் முதலியவை இருப்பதை, கடலடி ஆய்வு மூலம் எடுத்துக் காட்டினர். அப்பொழுது, முழு ஆராய்ச்சி செய்ய, அகழ்வாய்வு துறை கேட்டபோது, இலக்கியத்தில் உள்ள்ச்தைத் தானே நிரூபிக்கப் போகிறீர்கள், அதற்கு அகழ்வாய்வு தேவையில்லை என்றார்.

[8] அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் முதன்மை நோக்கத்திற்க்கு ஏற்ப இந்த மாநாட்டின் மைய ஆய்வு பொருள் அமைந்துள்ளது. “தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.”

http://www.iatrnew.org/

[9] கீழடி நம் தாய்மடி, பேட்னா வலதளம் – https://fetnaconvention.org/ta/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

5 பதில்கள் to “கீழடி – பற்பல நிபுணத்துவ சர்ச்சைகள், பேரினவாத பிடிவாதங்கள், மற்றும் மேடை முரண்பாடுகள் அதிகரிப்பது ஏன்? [1]”

 1. vedaprakash Says:

  தமிழ்.ஒன்.இந்தியா, கீழடி 5-ம் கட்ட அகழாய்வுகள் முடிவுகளில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது: சு. வெங்கடேசன் எம்.பி. By Mathivanan Maran | Updated: Sunday, October 13, 2019, 13:27 [IST]

  மதுரை: கீழடியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் 5-ம் கட்ட அகழாய்வுகளின் முடிவுகளில் இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக லோக்சபா எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பண்பாட்டு கழகம் சார்பில் கீழடி வைகை நதி நாகரிகம் சிறப்பு மாநாடு மதுரையில் நடைபெற்றது

  இதில் தொல்லியல் அறிஞர் முனைவர் சொ.சாந்தலிங்கம், மதுரை லோக்சபா எம்.பி. சு.வெங்கடேசன், இயக்குநர் மற்றும் திரைப்பட நடிகர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இதில் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் பேசியதாவது: தமிழை குறைத்து மதிப்பிட்டவர்கள் திரும்பி பார்க்கும் அளவிற்கு கீழடி தற்போது உள்ளது, இந்தியாவில் எந்த இடத்திலும் பானையில் எழுத்து பதிவு இல்லை. மூதாதையர் வழிபாடு கீழடியில் கிடைத்த பானையில் எழுத்து பதிக்கப் பட்டிருப்பது தமிழ் மூத்த மொழி என்பதற்கு ஒரு சான்று, தமிழர்கள் மூதாதையர்களை வழிபட்டவர்கள், 2500 ஆண்டுகளுக்கு முன் இறைவழிபாடு இல்லை, இதை திராவிட நாகரீகம் எனவும் சொல்லலாம் , தமிழ் என்றாலும் திராவிடம் என்றாலும் ஒன்று தான்.

  மண் முக்கியம் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சசிகுமார் பேசியதாவது: அகழாய்வுக்கு அதிகமான பொறுமை வேண்டும், அங்கு எடுக்கப்படும் ஒவ்வொரு மண்ணும் முக்கியம், அரசியல், மதம், சாதிக்கு அப்பாற்பட்டது கீழடி வரலாறு,

  பாடமாக வைக்க வேண்டும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும், இவை அனைத்தும் புத்தகத்தில் பாடமாக இடம் பெற வேண்டும், நம் உரிமையை நாம் விட்டுக் கொடுக்க கூடாது.

  எது பாரத பண்பாடு? லோக்சபா எம்.பி. சு. வெங்கடேசன் பேசியதாவது: தற்போது வரை கீழடியின் வயது 15 ஆயிரம் ஆகும். காலத்தினால் மிகப் பழமையான கல்வெட்டுகள் வைகை நதிக்கரையில் அதிகமாக காணப்படுகின்றன. அதனால் தான் கீழடியை வைகை நதி நாகரீகம் என கூறுகிறோம். கீழடி அகழாய்வில் நமக்கு தெரிவிப்பது சமத்துவத்தை தூக்கி பிடிக்கும் சமூகம் வாழ்ந்துள்ளது என்பதும், ஆத்திகம், நாத்திகம் தொடர்பான எந்த தடயமும் இங்கு கிடைக்கவில்லை, 3 பக்க அறிக்கையில் கீழடி ஆராய்ச்சியை மத்திய அரசு கைவிட்டது. அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் கீழடியை பாரத பண்பாடு எனக் கூறுகிறார், பாரத பண்பாடு என்றால் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும். 5 கட்ட ஆய்வின் முடிவல் பல இன்ப அதிர்ச்சி வெளிவரும்,அடுத்த முடிவுகளில் இன்ப அதிர்ச்சி கீழழடியை பாதுகாப்பது நமது மரபை பாதுகாப்பது போன்றது, கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, சர்வதேச அருங்காட்சியகம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  https://tamil.oneindia.com/news/madurai/fifth-phase-of-keezhadi-excavation-reports-to-give-more-details-says-venkatesan/articlecontent-pf406102-365492.html

 2. vedaprakash Says:

  விகடன், Published:Yesterday at 9 PMUpdated:Yesterday at 9 PM
  கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு! – கடைசிநாளில் குவிந்த மக்கள்
  அருண் சின்னதுரை, சாய் தர்மராஜ்.ச, ஈ.ஜெ.நந்தகுமார்

  மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றுது. கடந்த ஜூன்13-ம் தேதி தொடங்கிய அகழாய்வுப் பணிகள் இன்று நிறைவுபெறுவதாக தொல்லியல் துறை அதிகாரிகளும், தமிழக தொல்லியல் மற்றும் தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபாபாண்டியராஜனும் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

  கீழடி, கொந்தகை, பள்ளிச்சந்தை, மணலூர் என்று கீழடியில் சுற்றியுள்ள பகுதிகளில் 6ம் கட்ட அகழாய்வு பணி வரும் ஜனவரி மாதத்தின் இரண்டாவது அல்லது 3வது வாரத்தில் தொடங்கலாம் என்று தெரிகிறது. ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் இறுதி நாளான இன்று அகழாய்வுப் பணிகள் நடைபெறும் இடத்தை தொல்லியல் ஆர்வலர்களும், பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் திரளாக வந்து பார்வையிட்டுச் சென்றனர்.

  அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதால், பொதுமக்கள் 5ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்ற 52 குழிகளையும் இனி பார்வையிட முடியாது. புவிகாந்த புலவிசை உள்ளிட்ட பல்வேறு நவீன முறைகள் மூலம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி கொந்தகை, பள்ளிச்சந்தைக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் நடைபெற்றது.

  இதில் ஏராளமான பழமையான சான்றுகள் கிடைத்தது. எந்த ஒரு ஜாதி, மத அடையாளங்களிலும் தழுவாமல் கீழடியில் சான்றுகள் கிடைத்ததை உலகத் தமிழர்கள் வரவேற்றனர். இந்த அகழாய்வுப் பணியில் கிடைத்த பொருட்களையும் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தி அதன் ஆவணங்களை தயார்செய்யும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

  ஐந்தாம் கட்ட கள ஆய்வு முடிவு பெற்றாலும் ஆய்வகங்களில் நடக்கக்கூடிய அகழாய்வின் தொடர்ச்சி ஆய்வுகள் நடைபெறும். கீழடியில் கிடைத்த எலும்புகள் புனே மற்றும் கேரளாவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட உள்ளன. பானை ஓட்டு பகுப்பாய்வு, உலோக மாதிரி ஆய்வுகள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆய்வு நடைபெற உள்ளது.

  ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்ற இடத்தில் அகழாய்வுப் பணி இன்று மாலையோடு நிறுத்தப்பட்டது. ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்ற இடங்களைப் பார்வையிட இன்று கடைசி நாள் என்பதால் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் குவிந்தனர்.

  https://www.vikatan.com/news/tamilnadu/keezhadi-excavation-site-entry-to-people-to-be-banned-from-tomorrow

 3. vedaprakash Says:

  விகடன், Published:09 Oct 2019 12 PMUpdated:09 Oct 2019 12 PM
  கி.மு 600 முதல் கி.பி 2019 வரை… `கீழடி’ நேற்று இன்று நாளை! #Vikatan360
  சக்தி தமிழ்ச்செல்வன், வருண்.நா, HARIF MOHAMED S
  எம்.மகேஷ், சி அரவிந்தன்,

  தமிழர்களின் தாய்மடியாக மாறியிருக்கிற கீழடி பற்றிய முழுத் தொகுப்பு.

  “தொன்மம் என்பது மானுடத்தின் பெருங்கனவு’’
  – சிக்மண்ட் ப்ராய்ட்
  இதுவரை தமிழ்நாட்டில் எத்தனையோ அகழாய்வுகள் நடந்ததுண்டு. எத்தனையோ தொல்பொருள்கள் இந்த அகழாய்வில் கிடைத்திருக்கின்றன. ஆனால், கீழடிக்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம்? அப்படி என்ன கிடைத்துவிட்டது கீழடியில்… அப்படி என்ன தெரிந்துவிட்டது இந்த சிவந்த மண்ணில்… ஏன் இத்தனை தடைகள், இவ்வளவு போராட்டங்கள்… தமிழர்கள் பெருமையோடு கொண்டாட கீழடியில் கிடைத்த செய்தி என்ன?

  சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தின் பள்ளிச்சந்தை திடலில் இருக்கிறது அந்த தென்னந்தோப்பு. அந்த இடத்திற்கு குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள். 2,600 ஆண்டுகால வரலாற்றை சுமந்து நிற்கும் அந்த நாகரிக நிலத்தைப் பெருமிதத்துடன் தங்களின் குழந்தைகளுக்குக் காண்பிக்கிறார்கள். வரலாற்று ஆய்வாளர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரும் உச்சரிக்கும் சொல்லாக, அவர்தம் நினைவிலிருந்து என்றும் அகலாத பெருங்கனவாக மாறியிருக்கிறது, கீழடி.

  மதுரை-ராமநாதபுரம் பிரதான சாலையில், அழகன்குளம் துறைமுக நகரையொட்டி இருக்கிறது, கீழடி. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த ஆதி நிலத்தின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ தொலைவில், மணலூர் கண்மாயின் மேற்கரையில் உள்ளது, பள்ளிச்சந்தைத் திடல். அந்த மண்மேட்டில்தான் அகழாய்வு தொடங்கப்பட்டது.

  வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்ட இந்த இடத்தில், உழவு செய்யும்போது பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கிடைத்துவந்த நிலையில், தரைமட்டத்திலிருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் பாதிப்புக்குள்ளாகாமல் இருந்த இந்த மேடு, அகழ்வு செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது அகழாய்வு செய்யப்பட்டுவரும் இடம் 3.5 கி.மீ சுற்றளவுடன், 80 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. தொன்மையான ஊர்களான கொந்தகை, மணலூர் ஆகிய தொல் நிலப்பரப்புகளும் இப்பகுதியோடு தொடர்ச்சியுற அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  வைகை வறண்ட நதி அல்ல… வரலாற்று நதி
  மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு, வைகை நதிக்கரை நாகரிகத்தைப் பற்றி முழுமையான கள ஆய்வை நடத்த முடிவு செய்தது. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு, 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் வைகையின் தொடக்கப் பகுதியான வெள்ளிமலையிலிருந்து, அது வங்கக்கடலில் கலக்கும் அழகன் குளம் ஆத்தங்கரை வரை, ஆற்றின் இருபுறமும் ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்குள் இருக்கும் எல்லா கிராமங்களிலும் தொல்லியல்துறை கள ஆய்வை நடத்தியது. சுமார் 350 கிராமங்களில் கள ஆய்வை நடத்திய இந்தக் குழு, 293 கிராமங்களில் ஏதேனும் ஒரு வகையில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. அதாவது, 80 சதவிகித கிராமங்கள் வளமான வரலாற்று ஆதாரங்களைக் கொண்டுள்ளன. இந்தப் புள்ளிவிவரங்களே மிகச்சிறந்த கண்டுபிடிப்புதான். 256 கி.மீ நீளம் கொண்ட ஒரு நதியில், சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கிராமம் காலத்தின் மங்காத சுவடுகளைத் தனது தோளில் சுமந்தபடி நிற்கிறது. வைகை வறண்ட நதி அல்ல… வரலாற்று நதி என்பதை நிரூபிக்கின்றன புள்ளிவிவரங்கள்.
  விகடன் பிரசுரம் வெளியிட்ட ‘வைகை நதி நாகரிகம்’ நூலில் சு. வெங்கடேசன்

  தென்னந்தோப்பில் தெரிந்த செங்கல் சுவர்
  ஆய்வு நடந்துகொண்டிருக்கும் இடம் முதலில் தென்னந்தோப்பாக இருந்தது. வறட்சியின் காரணமாக மரங்கள் கருகிப் போனதால், செங்கல் சூளைக்கு மணல் எடுப்பதற்காகத் தோண்டியபோது, முதலில் செங்கல் சுவர் ஒன்று காணப்பட்டது. இதையடுத்து மத்திய தொல்லியல்துறை இந்த இடத்தில் அகழ்வு செய்தது. அந்த ஆராய்ச்சியில், பழங்காலத் தமிழர்கள் வாழ்ந்த நகரமைப்பும், உறை கிணறு, செங்கல் சுவர், எலும்புகள் என பலவும் கண்டறியப்பட்டன.

  சர்ச்சைகளைத் தொடங்கிவைத்த இரண்டு சந்தேகங்கள்!
  1. “அகழாய்வில், மதம் சார்ந்த எந்த அடையாளமும் கிடைக்காததால், தென்னிந்தியாவில் இருந்த மதமில்லா கலாசாரத்தை ஏற்க முடியாதவர்கள், திட்டமிட்டு கீழடி ஆய்வை முடக்கப் பார்க்கிறார்களோ” என்ற சந்தேகம் 2017 -ல் பலராலும் எழுப்பப்பட்டது. குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறையின் முன்னாள் தலைமைப் பேராசிரியர் வீ.அரசு உள்ளிட்ட கல்வியாளர்கள், இதைக் குறிப்பிட்டே மத்திய அரசின் அலட்சியப்போக்கை தொடர்ந்து விமர்சித்தனர்.

  2. பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே தொல்லியல் கண்காணிப்பாளரான அமர்நாத் ராம்கிருஷ்ணா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இது, ஆய்வை முடக்குவதற்காகச் செய்யப்பட்ட ஒன்றாகவே பலராலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், தொல்லியல் துறையின் விதிகளுக்கு உட்பட்டே இடமாற்றம் செய்யப்பட்டதாக இந்திய தொல்லியல் துறை விளக்கம் அளித்தது.

  `ஒரு தொல்லியல் வட்டத்தில் இரண்டு வருடங்கள் பணியாற்றிய கண்காணிப்பாளரைப் பணியிட மாற்றம் செய்யலாம். அமர்நாத் ராமகிருஷ்ணா, கீழடி அகழ்வாய்வுத் தளத்தை உள்ளடக்கிய பெங்களூர் வட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவிட்டதால் இட மாற்றம் செய்யப்பட்டார்’ என்று மத்திய தொல்லியல் துறை தெரிவித்தது.

  ‘கீழடி அகழாய்வுப் பணிகளை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்று விரும்புவதால், தனது இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்கிற அமர்நாத் ராமகிருஷ்ணாவின் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டார். இந்தக் கோரிக்கை பின் நிராகரிக்கப்பட்டது. இது, சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே இருந்தது.
  1939-லேயே கீழடிக்காக ஒலித்த குரல்!
  ‘வைகை நதிக்கரை, தாமிர பரணி நதிக்கரையை ஆய்வு செய்தால், சிந்து சமவெளிக்கு இணையான அல்லது சிந்து சமவெளியோடு தொடர்புடைய நாகரிகம் கிடைக்கும்’ என 1939-ல் கூறினார், கே.என்.தீக்ஷித். அவர், மொகஞ்சதாரோ அகழாய்வில் பங்குபெற்றவர். 1937 முதல் 1944 வரை இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India) நிறுவனத்தின் தலைமை இயக்குநராக இருந்தவர்.

  “சிந்து சமவெளி அகழாய்வுகளில் முத்துகள் கிடைத்துள்ளன. தமிழகத்தின் சில நதிகளிலும் முத்துக்குளித்தல் நடந்துள்ளன. அதனால், சிந்து சமவெளிக்கும் தமிழகத்துக்கும் நெருக்கமான பந்தமிருக்கலாம். வைகை, தாமிரபரணி நதிக்கரைகளில் அகழாய்வு செய்துபார்த்தால், புதிய வரலாறு பிறக்கக்கூடும்” என்று அப்போதே சொன்னார் கே.என்.தீக்ஷித்

  கீழடி ஆய்வு – தொடக்கப்புள்ளிகள்!
  பேராசிரியர் கரு.முருகேசன்
  கீழடி அகழாய்வுக்காக நிலம் வழங்கியவர்களில் பேராசிரியர் கரு.முருகேசனும் ஒருவர். எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல், அகழாய்வுக்குத் தனது நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கூறியவர்

  ஆசிரியர் பாலசுப்ரமணியன்
  பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கீழடியில் ஆய்வுசெய்ய வேண்டும் என்று நெடுங்காலமாகக் குரல்கொடுத்துவந்தவர்.

  வழக்கறிஞர் கனிமொழி மதி
  உயர் நீதிமன்றத்தில், கடந்த 2017-ம் ஆண்டு கீழடியில் அகழாய்வுப் பணிகளைத் தொடர வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும் அமர்நாத் ராமகிருஷ்ணா தொடர்ந்து கண்காணிப்பாளராகப் பணியாற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

  வழக்கு, கடந்த 2017 செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது.

  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு, மாநில அரசு மர்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
  வழக்கு தொடர்ந்தது ஏன்?
  ”கீழடி ஆய்வைத் தொடர்வதன்மூலம் கூடுதலான பொருள்கள் கிடைக்கும் என்பது என்னுடைய யூகமாக இருந்தது. நிறைய பொருள்கள் ஏற்கெனவே அகழ்வாராய்ச்சியில் நமக்கு கிடைத்திருந்தன. பானை ஓடுகள் கிடைப்பது அகழ்வாராய்ச்சியில் முக்கியமானது. மனித நாகரிகம் அங்கிருந்ததை முடிவுசெய்வது இந்தப் பானை ஓடுகள்தாம். ஓர் இடத்தில் பானை ஓடுகள் கிடைத்தாலே ஆராய்ச்சியைத் தொடர வேண்டும்.

  நான், பொதுநல வழக்கு போடுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, மூன்று கட்ட அறிக்கைகள் வெளியிடவில்லை என்பதும்தான்” என்றார், வழக்கறிஞர் கனிமொழி மதி.

  தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணா
  கீழடி அகழ்வாராய்ச்சியில், 2013-ம் ஆண்டு தொல்லியல் துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 2015 முதல் இவர் தலைமையில் இரண்டு கட்ட ஆய்வுகள் நடைபெற்றன. வரலாற்று ஆய்வாளர்கள் இவரது பணியைப் பாராட்டினர்.

  “1970 மற்றும் 2005-ல் நடைபெற்ற ஆய்வுகளுக்குப் பிறகு, மதுரையைப் பற்றியோ தமிழக நதிகளைப் பற்றியோ விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. தற்போது, ஆய்வு என் தலைமையில் நடைபெறுவது பெருமையாக இருக்கிறது” என்று அந்தத் தருணத்தில் குறிப்பிட்டார் அமர்நாத் ராமகிருஷ்ணா.

  இதுவரை கீழடியில் சுமார் 5,820 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  2-ம் கட்ட ஆய்வின் முடிவில், கீழடி நாகரிகம் 2,200 ஆண்டுகள் பழைமையானது என்று அமர்நாத் ராமகிருஷ்ணா அறிக்கை வெளியிட்டார். மூன்றாம் கட்ட ஆய்வு தொடங்கிய நிலையில் 2017-ம் ஆண்டு, அவர் அஸ்ஸாம் மாநிலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

  தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்- மாநில தொல்லியல் துறையின் ஆணையாளராகக் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதிபெற்று, ஜூன் மாதம் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கியது. செப்டம்பர் 20-ல் நான்காம் கட்ட ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

  எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ‘வைகை நதி நாகரிகம் ‘, ‘கீழடி’ என இரண்டு நூல்களை எழுதியுள்ளார். கீழடி தொடர்பாக, தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருபவர். வெகுஜன மக்கள் மத்தியில் இவரது எழுத்துகள்தான் கீழடி தொடர்பான தகவல்களைப் பரவலாகக் கொண்டு சேர்த்தது.

  மத்திய மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும்? – எழுத்தாளர் சு.வெங்கடேசன்
  கீழடியில் முதலாம் ஆண்டு அகழ்வாராய்ச்சி முடிந்தவுடன், இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி செய்ய அனுமதி தரவே மத்திய அரசு யோசித்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு, இரண்டாம் ஆண்டு அகழ்வாராய்ச்சி நடந்துமுடிந்தது. மூன்றாம் ஆண்டும் அனுமதி தர மறுத்தது மத்திய அரசு. அந்தக் காலகட்டத்தில்தான், ‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்திற்காகத் தமிழகமே கிளர்ந்தெழுந்தது. அதனால் வேறு வழியில்லாமல், மூன்றாம் ஆண்டு அனுமதி வழங்கியது மத்திய அரசு. ஆனால், அதுவரை அந்த அகழாய்வின் தலைவராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவை மாற்றிவிட்டு, ஶ்ரீராம் என்பவரைத் தலைவராக நியமித்தனர். அவர் பெயரளவிற்கு ஒரு அகழாய்வை நடத்திவிட்டு கீழடியில் எந்தவொரு கட்டுமானத்தின் தொடர்ச்சியும் இல்லை. எனவே, அகழாய்வைத் தொடரவேண்டிய அவசியமில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டு, கீழடி அகழ்வாராய்ச்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

  குஜராத், வாட்நகரில் அகழ்வாராய்ச்சி நடத்தி, அதில் கிடைத்த பொருள்களைக் கொண்டு உலக அளவில் ஒரு மெய் நிகர் அருங்காட்சியகம் அமைக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல உத்தரப்பிரதேச மாநிலத்தின் சனோலி பகுதியில் உள்ள 28 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட நிலமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. ஆனால், தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் பாதுகாக்கப்பட்ட இடமாக கீழடியை அறிவியுங்கள், அங்கு அருங்காட்சியகம் அமையுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்கெல்லாம் மத்திய அரசு செவி சாய்க்கவேயில்லை.

  கீழடியில், ஆராய்ச்சி எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். முதலில் ஆராய்ச்சி செய்வதற்கு கீழடியைப் பாதுகாக்க வேண்டும். சங்க கால வாழ்விடங்களின் தடயங்களும், எச்சங்களும் அதிகம் காணப்படும் பகுதி கீழடி. எனவே, கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 கிராமங்களை ‘சங்ககால வாழ்விடப் பகுதி’யாக மத்திய மாநில அரசுகள் உடனே அறிவிக்க வேண்டும்.

  பாதுகாக்கப்பட்ட இடமாக கீழடியைஅறிவிக்க வேண்டும் என்றும், அங்கு சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்றும், மத்திய கலாசார துறை அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய கலாசாரத் துறை அமைச்சர், ” மாநில அரசு இதுதொடர்பாக சரியான முன்முடிவைக் கொடுத்தால் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார். தொடர்ச்சியான அரசியல் அழுத்தத்தின் மூலமாக மட்டுமே இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்.

  இந்தியாவின் பூர்வகுடி மக்கள், திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். ’24 திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்தான்’ என்கிறார், கால்டுவெல். இன்றைக்கும் ஒடிசாவில் வாழும் பழங்குடி மக்கள் பேசும் மொழியில், 40 சதவிகித சொற்கள் தமிழ்ச் சொற்கள்தான். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் பழங்குடி மக்கள் பேசும் மொழிகளிலும் நிறைய சொற்கள் தமிழ்ச் சொற்களாகத்தான் இருக்கும். வைகை நதிக் கரையில் ஒரு நாகரிகம் இருக்கிறது என்றால், ஒட்டுமொத்த இந்திய நாகரிகங்களின் தாய்மடி கீழடியாகத்தான் இருக்கும்.

  உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், கீழடியைத் தங்கள் தாய்மடியாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். கீழடியைப் பாதுகாப்பதும், அங்கு ஆராய்ச்சியைத் தொடர்வதும்தான் நாடாளுமன்ற உறுப்பினராக என் முதல் பணி. நம் தமிழ் மக்கள் நிச்சயமாக கீழடியைக் கைவிட மாட்டார்கள்.

  கீழடிக்கும் சங்ககாலத்திற்கும் என்ன தொடர்பு? – பேராசிரியர் பாரதிபுத்திரன்
  சங்ககாலம் என்பது தொல்லியல் சார்ந்து நம் ஆய்வாளர்கள் கி.மு 2-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3-ம் நூற்றாண்டு வரையிலான 500 ஆண்டுகள் எனக் குறிப்பிடுகிறார்கள். தற்போது கிடைத்துள்ள பொருள்கள், இன்னும் 300, 400 ஆண்டுகள் பழைமையானவை எனச் சொல்கிறது. அசோகருடைய காலம் கி.மு 3-ம் நூற்றாண்டு என வரையறுத்திருக்கிறார்கள். அப்படிப் பார்க்கையில், அசோகர் காலத்துக்கு முன்பே தமிழில் எழுத்துருக்கள் இருந்திருப்பதாகத் தெரிகிறது.

  அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்களில் இருக்கிற ஒப்புமையைப் பார்க்கிறபோது, சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையானது எனக் கருதவைக்கிறது. தமிழர் நாகரிகம், நகர நாகரிகமாக இருக்கிறது. ஆய்வில் கிடைத்த உறைகிணறுகள், சுகாதாரப் போக்குகள் ஆகியவற்றைக் காணும்போது, ‘ஹரப்பா’, ‘மொகஞ்சதாரோ’ போல ஒரு முதிர்ச்சியான நாகரிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

  தமிழர்கள் கப்பல் கட்டுமானத் துறையில் தொழில்நுட்ப அறிவுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என இதன்மூலம் அரிய முடிகிறது. கடல் மற்றும் இயற்கை சார்ந்த புரிதல் தமிழர்களுக்கு அதிகம் என்பதையே ஆய்வில் கிடைத்த தானியங்கள், பானை ஓடுகளில் கிடைத்த குறியீடுகள் காட்டுகின்றன. மேலும், இவை பாண்டியர்களின் தலைநகராக இருக்கக்கூடுமோ என்ற தகவல் இதை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறது. ஏனென்றால், பாண்டியனின் தலைநகரான மதுரைக்கு மணலூர், ஆலவாய் உள்ளிட்ட பல பெயர்கள் உள்ளன. எனவே, அந்த வகையில் நிரூபிக்கப்பட்டால், தென்பாண்டிய வரலாறு இன்னும் பழைமையாக இருக்கும். தமிழ் எழுத்துரு குறித்த தெளிவான முடிவு கிடைத்திருக்கிறது. புழங்கு பொருள்களின்மீது தம் பெயரை எழுதிவைக்கும் முறையைப் பற்றி ஏற்கெனவே ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுவார். அந்த வகையில், எளிய மக்களும் எழுத்தறிவுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய ஒன்று. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கிறபோது, கீழடி மிகத் தொன்மையான, சிறப்பான நாகரிகம் என்பது தெளிவாகிறது.

  கீழடி பற்றிய தமிழ்நூல்கள்!
  ‘கீழடி – மதுரை சங்ககால தமிழர் நாகரிகம் ஓர்- அறிமுகம்’ – காந்திராஜன் – கருத்து-பட்டறை வெளியீடு

  ‘தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் – கீழடி வரை’ – சி.இளங்கோ- அலைகள் பதிப்பகம்

  ‘வைகை நதி நாகரிகம்’ – சு.வெங்கடேசன்- விகடன் பிரசுரம்

  ‘ கீழடி – தமிழ் இனத்தின் முதல் காலடி’ – நீ.சு.பெருமாள் – மேன்மை வெளியீடு

  ‘ஆதிச்சநல்லூர்- கீழடி மண் மூடிய நாகரிகம்’ – எம். தனசேகரன் ( அமுதன்) – தினத்தந்தி வெளியீடு

  மனிதன் தனது வேர்களைத் தேடி பயணிக்கையில், அது சரித்திரத்தின் சில பக்கங்களை மாற்றி புதிய வரலாற்றைக் கண்டடையும். கீழடி எழுதுவது, அப்படியொரு மகத்தான வரலாற்றைத்தான். அது இன்னும் நீளும்.

  https://www.vikatan.com/government-and-politics/archaeology/a-complete-history-of-keezhadi-excavation

 4. vedaprakash Says:

  தினமலர், கீழடி அகழாய்வு குழிகள் இன்று மூடல்
  Updated : அக் 13, 2019 03:58 | Added : அக் 13, 2019 03:03 |

  https://www.dinamalar.com/news_detail.asp?id=2387828

  திருப்புவனம்:கீழடியில், அகழாய்வு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடும் பணி, இன்று துவங்குகிறது.
  சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில், ஜூன், 13ல் தமிழக தொல்லியல் துறை, ஐந்தாம் கட்ட அகழாய்வு பணியை, 47 லட்சம் ரூபாய் செலவில் துவங்கியது. தனியார் நிலங்களில், 52 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு நடந்தது. 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.செப்., 30ம் தேதியுடன் அகழாய்வு பணி நிறைவு பெற்றாலும், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன், மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக் கப்படுவதாக அறிவித்ததால், ஒரு சில நாட்கள் மட்டும் பணிகள் நடந்தன. அகழாய்வு பணியில், 63 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது, பணிகள் முடிவடைந்ததால், குழிகளை மூட, தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. இன்று மாலை முதல், அகழாய்விற்காக தோண்டப்பட்ட குழிகள், இயந்திரம் மூலம் மூடப்படுகின்றன. ஒருசில நாட்களில், குழிகள் அனைத்தும் முழுமையாக மூடப்படும்.’அடுத்த கட்ட அகழாய்வு நடக்கும் வரை, குழிகளை மூடாமல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்’ என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 5. vedaprakash Says:

  மாலைமலர், கீழடி அகழாய்வு பணிக்கு 22 ஏக்கர் நிலம் கொடுத்த அக்காள்-தங்கை
  பதிவு: அக்டோபர் 09, 2019 14:04 IST

  https://www.maalaimalar.com/news/district/2019/10/09140426/1265250/sisters-gave-22-acre-land-for-Keezhadi-Excavation.vpf

  அகழாய்வு மேற்கொள்வதற்காக கீழடியை சேர்ந்த நீதியம்மாள், மாரியம்மாள் சகோதரிகள் தங்களுடைய 22 ஏக்கர் நிலத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து உள்ளனர்.

  காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்தி வருகின்றனர்.

  4 கட்ட பணி முடிந்த நிலையில் கீழடியில் பழந்தமிழர் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

  இதையடுத்து 5-வது கட்ட அகழாய்வு பணி ஜூன் மாதம் தொடங்கியது. இதற்காக கீழடியில் தேர்வு செய்யப்பட்ட 110 ஏக்கரில் 10 ஏக்கரில் மட்டும் அகழாய்வு பணி மும்முரமாக நடைபெற்றது.

  கீழடி அகழாய்வு

  இந்த ஆய்வின் போது அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பம், இரும்பு-செப்பு பொருட்கள் என 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.

  அதே போல் பழந்தமிழர் வாழ்வியலை அறியும் வகையில் இரட்டை வட்டச்சுவர், தண்ணீர் தொட்டி, உறைகிணறு, கால்வாய் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன.

  கீழடியில் கிடைத்த பொருட்களின் காலம், தன்மை குறித்து அறிய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி பழமையான பொருட்களை ஆய்வு செய்ததில் அவை 2,600 ஆண்டுகள் பழமையானது எனவும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையான அல்லது அதற்கு முந்தைய நாகரிகம் கொண்டதாக கீழடி நாகரிகம் விளங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  அகழாய்வு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட 110 ஏக்கரில் வெறும் 10 ஏக்கரில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக தகவல் கிடைத்த நிலையில் எஞ்சியுள்ள பகுதிகளையும் ஆய்வு நடத்தினால் தமிழர்களின் முதன்மையான வாழ்க்கை முறை, அவர்கள் வாழ்ந்த காலம் குறித்த தகவல்கள் வெளிவரலாம். எனவே 6-வது கட்ட அகழாய்வு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளது.

  கீழடியில் பழந்தமிழர்கள் வாழ்ந்திருப்பது அந்தப்பகுதி மக்களிடையே பெருமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அகழாய்வு மேற்கொள்வதற்காக கீழடியை சேர்ந்த நீதியம்மாள், மாரியம்மாள் சகோதரிகள் தங்களுடைய 22 ஏக்கர் நிலத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து உள்ளனர்.

  இது பற்றி அவர்கள் கூறுகையில், அகழாய்வு செய்வதற்காக எங்களது 22 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளோம். அவற்றில் முழுமையாக ஆய்வு செய்தால் இன்னும் பொருட்கள் கிடைக்கும். பழந்தமிழர்கள் எங்கள் பகுதியில் வாழ்ந்திருப்பதை நினைத்தால் பெருமையாக உள்ளது. இதன் மூலம் எங்கள் ஊர் உலகத்திற்கே தெரிய வந்துள்ளது என்றனர்.

  இதே போல் கருப்பையா என்பவரது மனைவி சேதுராமுவும், தனது 2½ ஏக்கர் நிலத்தை அகழாய்வு பணிக்காக கொடுத்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: