தொகுலுவ மீனாட்சி சௌந்தரராஜன் (1922-2013) – இன்னும் கௌரவிக்கப்பட வேண்டியர், பாராட்டப்படவேண்டியவர்.

தொகுலுவ மீனாட்சி சௌந்தரராஜன் (1922-2013) – இன்னும் கௌரவிக்கப்பட வேண்டியர், பாராட்டப்படவேண்டியவர்.

T. M. Soundararajan 1922 - 2013

டி. எம். சௌந்தரராஜனுக்கு சிறந்த தேசிய விருது கொடுக்கப்படாதது: டி. எம். சௌந்தரராஜன் (1922-2013) சரியானமுறையில் கௌரவிக்கப்படவில்லை, மரியாதைச் செய்யப்படவில்லை, ஆதரிக்கப்படவில்லை, பாராட்டப்படவில்லை எனலாம். தமிழர், உலகமெலாம் பரவியிருக்கும் தமிழர் என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டு, தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தாலும், தேசிய அளவில் அவருக்கு எந்த விருதும் கொடுக்கப்படவில்லை, அதாவது, பரிந்துரைக்கப்படவில்லை[1]. தமிழன் “தமிழனை” இல்லை, “தமிழில்” பாடியவனை மதிக்கவில்லை[2]. பிறகு வந்த எஸ். பி. பாலசுரமணியம், கே. ஜே. ஜேசுதாஸ் போன்றோர் மூன்று முறை, “சிறந்த பாடகர்” என்று “தேசிய விருது” பெற்றிருக்கிறர்கள்[3]. இதற்கெல்லாம் காரணம் தமிழர், தமிழ் அரசியல்வாதிகள், குறிப்பாக நாத்திகம் பேசிவந்த-வரும் திராவிட அரசியல்வாதிகள் தாம். இதுதான் உண்மை. ஒரு தெலுங்கனுக்கு, ஒரு மலையாளிக்கு பரிந்துரைக்கலாம், ஆனால், ஒரு சௌராஷ்டிரனுக்கு பரிந்துரைக்கக் கூடாது, அதிலும் தெய்வபக்தி பாடல்கள் பாடும், வடஇந்தியனுக்கு சிறப்பு சேரக்கூடாது என்ற எண்ணம் அவர்களிடம் இருந்தது[4]. தமிழர்களுக்கே அத்தகைய மனப்பாங்கு, வித்தியாசம், துவேஷம் இருந்தபோது இன்னும் இருக்கும்போது, வடஇந்தியர்களை என்னசொல்வது?

TMS Karnataka music concertகர்நாடக சங்கீதத்திலிருந்து சினிமாவிற்கு வந்தவர்: டி. எம். சௌந்தரராஜனின் [Thoguluva Meenatchi Soundararajan] தந்தையின் பெயர் மீனாட்சி ஐயங்கார், அவருக்கு இவர் இரண்டாவது மகன் ஆவர். புரோகிட குடும்பத்தில் பிறந்தவர், இவரது சகோதரர் சிறந்த வேதப் பண்டிதர்[5]. TMS singing - AVM, Susheela, Karunanidhi, Lata Mangeskarஏழு வயது முதலே சங்கிதத்தைக் கற்று வந்தவர். சின்னகொண்ட சாரங்கபாணி தேசிகர் என்பவரிடத்தில் கர்நாடக சங்கீதம் பயின்றவர். மதுரையில் சௌராஷ்டிர பள்ளிக் கூடத்தில் இருந்த இசை ஆசிரியர் ஆவர். பிறகு அரியக்குடி ராஜாமணி ஐயங்காரிடத்தில் இசைக் கற்றுக் கொண்டு தனது 23 வயதில் மேடையில் பாட ஆரம்பித்தார். முதன்முதலில் மதுரையிலுள்ள சத்குரு சமாஜம் என்ற சபையில் 1945ல் முதல் கச்சேரி செய்தார். 1946-2013 காலத்தில் 10,000ற்கும் மேலாக பல பாடல்கள், 2500 பக்தி பாடல்கள் முதலியவற்றை, எல்லா மொழிகளிலும் பாடியுள்ளார்[6]. 1957-2012 காலத்தில் கர்நாட இசைக் கச்சேரிகளும் செய்துள்ளார்.

TMS_familyடி. எம். சௌந்தரராஜனின் வருத்தம்: திறமை இருந்தும் ஆரம்ப காலங்களிலிருந்தே, ஒதுக்கப்பட்டவர் டி. எம். சௌந்தரராஜன் எனலாம், இதை அவர் தனிமையில், சில நண்பர்களிடம் சொல்லிக் கொண்டுள்ளார். 2000களில் வெளிப்படையாகவே தன்னைப் பார்க்க வந்தவர்களிடம், தனக்கு பாட சந்தர்ப்பம் கொடுப்பதில்லை என்று கூறியுள்ளார்[7]. தனது மகன் செல்வ குமாருக்கு பாட சில சந்தர்ப்பங்கள் கிடைத்தது, பிறகு கிடைக்கவில்லை. இதைப் பற்றியும் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். பிறகு இரண்டு மகன்களும் இவரது குரலில், இவரோடு பாடி வந்தனர். “கானா பாட்டு” என்ற பெயரில் தனது முருகர் பாடல்களை அவமதித்துள்ளதைப் பற்றி நிரம்பவே வருத்தப்பட்டுள்ளார். குறிப்பாக, சிலர்[8] வேண்டுமென்றே அவ்வாறு செய்வதைக் கேள்விபட்டு மிக்கவே வருந்தினார்.

Hindi film singersஇந்திபாடகர்களப் போல டி. எம். சௌந்தரராஜன் கௌரவிக்கப் படவில்லை, பாராட்டப்படவில்லை: என்னைப் பொறுத்தவரையில் கே. எல். சைகல், முகேஷ், தலத் மெஹ்மூத், மன்னா டே, ஹேமந்த் குமார், மஹேந்திர கபூர், கிஷோர் குமார், முஹமது ரபி எல்லோருமே பிடிக்கும், அவர்கள் பாடல்களை கேட்டிராத இந்தியனே இல்லை எனலாம். அதே போலத்தான் கண்டசாலா, ஜேசுதாஸ், ராஜ் குமார் முதலியோரும். நிச்சயமாக இவர்களைப் போல, ஏன் சில விஷயங்களில், இவர்களையும் விட சிறந்த பாடகர் டி. எம். சௌந்தரராஜன் தான். இவரைப் போல ஒவ்வொரு நடிகனுக்கு அவரவர் குரலில் பாடி, கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும், கண்களை மூடிக் கொண்டு பாடலைக் கேட்டாலும், அந்த பாடல் யாருக்காக டி. எம். சௌந்தரராஜன் பாடியிருக்கிறார் என்பதனை சொல்லிவிட முடியும். அத்திறமை நிச்சயமாக மற்ற பாடகர்களிம் இல்லை. அப்படி அவர்கள் ஒருவேளை முயற்சி செய்திருந்தாலும், அவர்களது இயற்கை குரல் பல இடங்களில் பாடகரைத் தான் நினைவூட்டுமே தவிர, அப்பாடல் பாடப்பட்ட நடிகனை நினைவூட்டாது. அதாவது, அவர்கள் செய்த தவறுகள் அவர்கள் இன்னார் என்பதனைக் காட்டி விடும், காட்டி இருக்கின்றன. தமிழ் உச்சரிப்பே காட்டிக் கொடுத்து விடும். ஆனால், டி. எம். சௌந்தரராஜன் ஒரு விதிவிலக்கு[9].

Tamil-Hindi film singersகடைசி நேரத்தில் கூட ஒதுக்கப் பட்டார்: நேற்று, 25-05-2013 (சனிக்கிழமை) டி. எம். சௌந்தரராஜன் வீட்டிற்கு வந்திருந்தவர்கள் கூட, பெரும்பாலும், ஏதோ வரவேண்டுமே என்ற எண்ணத்தில் தான் வந்திருக்கிறார்கள். ஊடகக்காரர்கள், ஏதோ நேரிடை ஒளி-ஒலிபரப்பு செய்கிறோம் என்று கேவலப் படுத்தியிருக்கிறார்கள். ஏதோ முதன்முதலாக அத்தகைய வேலைக்கு ஒத்திகை பார்த்த மாதிரி இருந்தது. அவர்கள் அவேலையைச் செய்யாமலிருந்தாலே நண்ராக இருந்திருக்கும் போலிருந்தது.

குறிப்பு: இணைதளத்திலிருந்து புகைப்படங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. அனைவருக்கும் நன்றி, இத்தளத்திலிருந்து புகைப்படங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன – http://tmspadam.blogspot.in/ – நன்றி. இவருடைய டளம் மிகவும் அருமையாக உள்ளது.

© வேதபிரகாஷ்

26-05-2013


[1] தேசிய விருது கொடுக்கப்பட வேண்டுமானால், அந்தந்த மாநிலத்திலிருந்து பெயர் பரிந்துரைக்கப் படவேண்டும். அவரைப் பற்றிய விவரங்கள் அனுப்பப்படவேண்டும். பிறகு, மத்தியில் “ரெகமன்டேஷன்” தேவை. அப்பொழுதுதான் விருதுகள் கிடைக்கும். “பத்மஶ்ரீ” விருதுகளைப் பெரிதாக நினைக்க வேண்டாம், அது தீவிரவாதிகளுக்கு எல்லாம் கொடுக்கப் பட்டுள்ளது!

[2] எம். எஸ். சுப்புலட்சுமிக்குக் கூட சிறப்பாக, பெருமையாக, திருப்பதியில் எல்லோரும் பார்த்து வியக்கும் வண்ணம், ஆந்திராக்காரர்கள் தாம் வைத்திருக்கிறார்கள், தமிழர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. காற்றினில் கீதங்கள் கரைந்ததோடு சரி!

[3] ஒப்புமைப்படுத்தி சொல்லப்படவில்லை, ஆனால், திறமை இருந்தும் பரிந்துரை செய்ய ஆட்கள் தேவை என்பதைத்தான் சுற்றிக் காட்டப்படுகிறது. தமிழகத்தில் வலுவுள்ள அரசியல்வாதிகள் இருந்தாலும், அவர்கள் தங்களைத் தாமே போற்றி பட்டங்களைக் கொடுத்துக் கொண்டு, பாராட்டு விழா நடத்தினார்களே தவிர டிஎம்சை நிச்சயமாக ஒதுக்கிவைத்தனர்.

[4] இதெல்லாம், இத்தகைய சொற்றொடர்கள் எல்லாம், வாதத்திற்காக, குறிப்பாக திராவிட சித்தாந்திகளுக்கு உரை/உறைப்பதற்காக உபயோகப்படுத்தப் படுத்தப் பட்டுள்ளது, மற்றபடி எந்த மொழியாளர்களின் மீதும் எந்த விதமான வெறுப்புடன் கூறப்படவில்லை.

[5] இதெல்லாமே போதும், ஏன் அவர் தேசிய விருதுகளைப் பெறமுடியவில்லை, குறிப்பாக, தமது மாநிலத்திலிருந்து பரிந்துரைக்கப்படவில்லை என்பதற்கு. இதே வேறொரு மாநிலத்தவராக இருந்தொரிந்தால், இந்நேரம் எங்கேயோ சென்றிருப்பார் டி. எம். சௌந்தரராஜன்.

6 இந்தியில் கூட பாடியுள்ளார், ஆனால், தமிழகத்தில் இருந்து வந்தவர் என்று ஒருசில பாட்டுகளோடு அனுப்பி வைத்து விட்டார்களாம். இதை அவரே சொல்லிக் கொண்டுள்ளார்.

[8] இது விஷமத்தனமாகச் செய்யப்பட்டது தான். ஏனெனில், முன்னமே இதைப் பற்றி விவாதம் வந்துள்ளது. மது அருந்துதல் பற்றி ஒரு பாட்டு உபயோகப்படுத்தப்பட்டது குறித்து, ஒருவர், “இறைவனிடம் கை ஏந்துகள்” என்ற பாட்டை, “பாட்டிலை கையேந்துங்கள், கிக் வராமல் இருப்பது இல்லை” என்று ஒரு பாட்டு “கானா பாட்டாக” வந்தால், முஸ்லீம்கள் சும்மா இருப்பார்களா என்று கேட்டபோது மௌனமாகி விட்டனர்.

[9] இந்த விதிவிலக்குதான், தமிழர்களும் மற்ற இந்தியர்களும் அவரை ஒதுக்கிவிட்டனர் போலும்!

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

3 பதில்கள் to “தொகுலுவ மீனாட்சி சௌந்தரராஜன் (1922-2013) – இன்னும் கௌரவிக்கப்பட வேண்டியர், பாராட்டப்படவேண்டியவர்.”

 1. vedaprakash Says:

  தமிழ் திரையிசை சக்கரவர்த்தி டி.எம்.எஸ் மரணம்
  00:32:14…………………………Sunday……………………2013-05-26
  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=50631

  சென்னை : பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சென்னையில் நேற்று காலமா னார். அவருக்கு வயது 91. கடந்த மாதம் வீட்டில் தவறி விழுந்ததையடுத்து டி.எம்.சவுந்தரராஜன் தலையில் காயம் ஏற்பட்டது. மயிலாப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார்.

  பின்னர் வீடு திரும்பினார். மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 13,ம் தேதி மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குணமடைந்து 20,ம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று பிற்பகல் திடீரென மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கு மயிலாப்பூர் சுடுகாட்டில் இன்று மதியம் நடக்கிறது. மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மந்தைவெளி யில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான திரையுலகினர் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

  காற்றில் கரைந்த பாட்டுக் குயில்

  மதுரையில் 1922,ம் ஆண்டு பிறந்தவர் டி.எம்.எஸ். ‘தொகுளுவ மீனாட்சி அய்யங்கார் சவுந்தரராஜன்’ என்ற பெயரின் சுருக்கம்தான் டி.எம்.எஸ். காரைக்குடி ராஜாமணி அய்யங்காரிடம் சங்கீதம் கற்றார். 23,வது வயதில் சுமித்ரா என்பவரை திருமணம் செய்தார். இயக்குனர் சுந்தர்லால் நட்கர்னி 1950,ல் ‘கிருஷ்ண விஜயம்’ படத்தை இயக்கியபோது, இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் டி.எம்.எஸ் பற்றி சொன்னார். இதையடுத்து அந்தப் படத்தில் ‘ராதா நீ என்ன விட்டு போகாதேடி’ என்ற பாடலை பாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. டி.எம்.எஸ் பாடிய முதல் பாடல் இது. இங்கிருந்து தொடங்கிய டி.எம்.எஸ்சின் கணீர் குரலில் மொத்த தமிழகமும் மயங்கும் என்பது அப்போது யாருக்கும் தெரியாது.

  தொடர்ந்து ‘மந்திரிகுமாரி’, ‘தேவகி’ படங்களில் பாடிய அவர், பிறகு சென்னை வந்தார். இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் அவருக்கு பக்திப் பாடல்கள் பாட வாய்ப்பு கொடுத்தார். அடுத்து ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் இசையமைப்பாளர் சுதர்சனம் சிபாரிசு செய்ததன் மூலம், ‘செல்லப்பிள்ளை’ படத்தில் பாடினார். எம்.ஜி.ஆர், சிவாஜி சேர்ந்து நடித்த ‘கூண்டுக்கிளி’ படத்தில் சிவாஜிக்காக டி.எம்.எஸ் பாடிய பாடலை கேட்ட எம்.ஜி.ஆர், ‘மலைக்கள்ளன்’ படத்தில் ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடலை பாட வாய்ப்பளித்தார். இது பலத்த வரவேற்பை பெற்றதையடுத்து பிரபலமானார். எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன், டி.எம்.எஸ்., பி.சுசீலா ஆகியோர் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி படங்களில் கூட்டணி சேர்ந்து கொடுத்த மாபெரும் ஹிட் பாடல்கள் கணக்கில் அடங்காது.

  1946 முதல் 2007ம் ஆண்டுவரை தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான தமிழ்ச் செம்மொழி பாடலுக்கும் அவர் குரல் கொடுத்திருந்தார். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களையும், 2 ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.

  எந்த பாடலையும் தெளிவான உச்சரிப்புடன் பாடும் டி.எம்.எஸ், எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் பாடும்போது அவரவர் குரலில் பாடுவது போலவே இருக்கும். சுமார் 20 வருடம் அவர்களின் வெற்றியில் பங்கு கொண்ட இவர், அடுத்து, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், நாகேஷ் உட்பட பல நடிகர்களுக்கு பாடியுள்ளார். எந்த நடிகருக்கு பாடினாலும் கேட்கிறவர்களின் மனதுக்குள் அந்தந்த நடிகர்களின் முகத்தை கொண்டு வரச் செய்யும் குரல் டி.எம்.எஸ்க்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

  சோகம், காதல், வீரம், தத்துவம் என பல்வேறு விதமாகப்பாடும்போது அந்தந்த உணர்ச்சியுடன் பாடுவது டி.எம்.எஸ்சின் சிறப்பு. ‘புதிய பறவை’யில் இடம்பெறும், ‘எங்கே நிம்மதி’ பாடலை கேட்கிற யாரும் அந்த நொடியில் பாடலுக்குள் ஒன்றி விடுவார்கள். ‘யாருக்காக?’, ‘போனால் போகட்டும் போடா’, ‘சட்டி சுட்டதடா’, ‘வீடுவரை உறவு’ உட்பட பல பாடல்கள் இதற்கு உதாரணம். காதல் பாடல்களில், அவர் குரலில் மென்மையாக நெளியும் காதலை காதலிக்காதவர்களும் உணரமுடியும். ‘மயக்கமென்ன ஒரு மவுனமென்ன?’, ‘ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்’, ‘ராஜாவின் பார்வை ராணி என் பக்கம்’ என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

  அவர் பாடிய முருகன் பாடல்கள்தான் பட்டிதொட்டியெங்கும் கோயில் கொடைகளில் இன்றும் பாடப்படுகிறது. ‘உள்ளம் உருகுதய்யா’ என்று அவர் தொடங்கினால் உருகிவிடுகிறது நெஞ்சம். ‘திருப்புகழ்’ பாடலான ‘முத்தைத்தரு பக்தித் திருநகை’ பாடலை அவர் இலக்கண சுத்தமாக பாடியது அந்த காலத்தில் பலத்த பாராட்டைப் பெற்றது. அதே போல, சிறப்பு ழகரத்துக்கும் மற்ற லகர, ளகரங்களுக்குமான வித்தியாசத்தையும், ர, ற மற்றும் ண, ன ஒலிகளை வேறுபடுத்தும் விதத்தையும் தெளிவாக அறிந்தவர் அவர். ‘முத்துக்களோ கண்கள்… தித்திப்பதோ கன்னம்’ என்ற பாடலை திரும்ப திரும்ப கேட்போருக்கு இந்த ண, ன உச்சரிப்பு வித்தியாசம் புரியும்.

  பாடகராக மட்டுமின்றி, நடிப்பிலும் சிறந்து விளங்கியவர் டி.எம்.எஸ். ‘பட்டினத்தார்’, ‘அருணகிரிநாதர்’, ‘கல்லும் கனியாகும்’, ‘கவிராஜ காளமேகம்’ஆகிய படங்களில் நடித்தார். இதில் பாடகர் ஏ.எல்.ராகவனுடன் இணைந்து அவர் தயாரித்த ‘கல்லும் கனியாகும்’ படம் நஷ்டத்தை கொடுத்தது. 76ல் ‘பலப்பரீட்சை’ என்ற படத்துக்கு இசையமைத்தார். இவர் தமிழில் கடைசியாகப் பாடிய படம், ‘வாலிபன் சுற்றும் உலகம்’.

  மறைந்த டி.எம்.எஸ்சுக்கு சுமித்ரா என்ற மனைவியும் பால்ராஜ், செல்வகுமார் என்ற மகன்களும் சந்திரிகா, மல்லிகா என்ற மகள்களும் உள்ளனர்.
  மத்திய அரசின் பத்மஸ்ரீ உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் டி.எம்.எஸ். அமெரிக்க இசையுலகக் குரல் ஆய்வு நிறுவனம், இவரது குரலை, ‘ஆசியாவின் சக்தி வாய்ந்த குரல்’ என பதிவு செய்துள்ளது. காலத்தால் அழிக்க முடியாத பாடல்களால் வாழ்ந்துகொண்டிருக்கும் டி.எம்.எஸ்சின் குரல் காற்றிருக்கும் வரை காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

 2. vedaprakash Says:

  பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் உடல் தகனம்! ஏராளமான பேர் கண்ணீர் அஞ்சலி!!
  தினமலர் – ச, 25 மே, 2013

  உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் காலமான பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன்(91 வயது) உடல் தகனம் செய்யப்பட்டது. டி.எம்.சவுந்தர்ராஜன், 1922, மார்ச், 24ல், மதுரையில் பிறந்தார்.சிறுவயதில் இருந்தே, இசை மீது அதிக நாட்டம் கொண்ட இவர், பிரபல வித்துவான் பூச்சி சீனிவாச அய்யங்காரின் மருமகன், காரைக்குடி ராஜாமணி அய்யங்காரிடம், முறையாக இசை பயின்றார். இசைப் பயிற்சிக்கு பின், பல்வேறு கச்சேரிகளில் பாடினார்.

  கடந்த, 1946 ஆண்டு வெளிவந்த, கிருஷ்ண விஜயம் என்ற படத்தில், ராதே என்னை விட்டு ஓடாதே… என்பதே, திரையுலகில் அவர் பாடிய, முதல் பாடல். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில், 10 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், சிவகுமார் போன்ற மூத்த தலைமுறை நடிகர்களுக்கும், ரஜினி, கமல், போன்ற இளைய தலைமுறை நடிகர்களுக்கும் பாடல் பாடியுள்ளார்.

  கதாநாயகர்களுக்கு தகுந்தாற் போல் பாடியதால், நடிகர்களே நேரடியாக பாடுவது போல், உணர வைப்பார் என, போற்றப்பட்டார். இசை சக்கரவர்த்தி ஏழிசை மன்னர் ஞானகலா பாரதி போன்ற விருதுகளை பெற்றுள்ளார். கடந்த, 2003ம் ஆண்டு, இவருடைய கலை சேவையை பாராட்டி, மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது. தமிழக அரசு, கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.

  கடந்த, 10 நாட்களுக்கு முன், உடல் நலம் சரியில்லாமல், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டி.எம்.எஸ்., கடந்த, 19ம் தேதி, வீட்டிற்கு திரும்பினார். பின், வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று(மே 25ம் தேதி) உடல்நிலை மோசமானதால், காலமானார். இவருக்கு, சுமித்ரா என்ற மனைவியும், மல்லிகா என்ற மகளும், பால்ராஜ், செல்வகுமார் ஆகிய மகன்களும் உள்ளனர்.

  கண்ணீர் அஞ்சலி: சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, சிவக்குமார், விஜயகாந்த், டி.ராஜேந்திரன், பாக்யராஜ், வடிவேலு, ராஜேஷ், மனோ, பி.சுசீலா, எம்.எஸ்.பாஸ்கர், சங்கர் கணேஷ், வாணி ஜெயராம், ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட்ட பல திரையுலகினரும், அழகிரி, ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

  உடல் தகனம் : திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்திய பின்னர் டி.எம்.சவுந்தரராஜனின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் வைத்து உடல் தகனம் செய்யப்பட்டது. டி.எம்.எஸ். அவர்களின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  வாழ்க்கை வரலாறு

  டி.எம்.சவுந்திரராஜன், 1922, மார்ச் 24ம் தேதி, மதுரையில் பிறந்தார். திரையுலக பின்னணி பாடலில் சிகரம் தொட்ட இவர், பக்திப் பாடலிலும் முத்திரை பதித்தார். 1946ம் ஆண்டு முதல், திரையுலகில், 60 ஆண்டு காலம் பணியாற்றினார். வயது முதிர்வின் காரணமாக ஓய்வெடுத்து வந்தார்.

  சிறு வயதில் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறைப்படி இசைப்பயிற்சி பெற்றார். பல ஆண்டுகள் கச்சேரியில் பாடியவருக்கு, 1950ம் ஆண்டு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு தேடி வந்தது. சுந்தரராவ் நட்கர்னியின் கிருஷ்ண விஜயம் படத்தில் ராதே நீ என்னை விட்டுப் போகதேடி என்ற பாடலை பாடினார். தேவகி என்ற படத்தில் பாடி, நடிக்கவும் செய்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசனுக்கு இவர் பாடிய பாடல்கள், அழியாப் புகழ் பெற்றவை. 1950-90 வரை நடித்த முன்னணி தமிழ் நடிகர்கள் அனைவருக்கும் குரல் கொடுத்தார். தமிழ்த் திரையுலகின் அனைத்து இசைப்பாளர்களிடமும் பாடினார். இறுதியாக 2010ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தமிழ் செம்மொழி மாநாட்டு பாடலை பாடினார். இந்தியாவின் முன்னணி மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படப் பாடல்களையும், 2,500க்கும் அதிகமான பக்திப் பாடல்களையும் பாடினார். மத்திய அரசு இவருக்கு 2003ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதளித்து கவுரவித்தது. தமிழக அரசின் கலைமாமணி உட்பட பல விருதுகளை பெற்றார்.

  பட்டங்கள் : இவரது திறமையை பாராட்டி, பல்வேறு அமைப்புகள் இவருக்கு ஏராளமான பட்டங்களை வழங்கின. பாடகர் திலகம், சிம்மக் குரலோன், இசை சக்கரவர்த்தி, இசைக்கடல், எழிலிசை மன்னர், குரல் அரசர் போன்றவை இவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்கள்.

  முதல்வர் ஜெயலலிதா இரங்கல்: தமிழக மக்களை தனது, சிம்மக் குரலால் கவர்ந்தவர் டி.எம்.எஸ்., என, முதல்வர் ஜெயலலிதா, டி.எம்.சவுந்திரராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கை: ராதே என்னை விட்டு போகதடி என்ற பாடலின் மூலம், தமிழ் திரையுலகில், அடியெடுத்து வைத்த டி.எம்.சவுந்திரராஜன், ரசிகர்களை வசிய வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ள சவுந்திரராஜன், தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் சில பாடல்களை பாடியுள்ளார்.

  முருக பெருமான் மீதான, கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், உள்ளம் உருகுதய்யா முருகா, சொல்லாத நாளில்லை, சுடர்மிகு வடிவேலா போன்ற பல பாடல்களுக்கு, தானே இசையமைத்து, உள்ளம் உருக பாடி, முருக பக்தர்களின் மனங்களில், நீங்கா இடம் பிடித்தர்.

  அன்பை தேடி என்ற திரைப்படத்தில், சத்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் என்றும் துவங்கும் பாடலிலும், சூரிய காந்தி என்ற படத்தில், ஓ… மேரி தில் ரூபா என்று துவங்கும் பாடலிலும், டி.எம்.எஸ்., உடன் இணைந்து, நான் பின்னணி பாடியது என் நினைவை விட்டு நீங்கா நிகழ்வாகும். தமிழக மக்களை தனது, சிம்மக் குரலால் கவர்ந்த டி.எம்.எஸ்., உடல் நலக் குறைவால், சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து, ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். டி.எம்.எஸ்., மறைவு தமிழ் திரைப்பட துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. சவுந்திரராஜனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தி.மு.க., தலைவர் கருணாநிதி: தமிழ் சினிமாவில், இரு துருவங்களாக விளங்கிய, எம்.ஜி.ஆர்., – சிவாஜி ஆகியோருக்கு, டி.எம்.எஸ்., குரல் பொருந்தியதைப் போல், வேறு எந்தப் பாடகரின் குரலும் பொருந்தியதில்லை. இனிய குரல், சிறந்த தமிழ் உச்சரிப்பு, நடிகருக்கு ஏற்றாற்போல் குரலை மாற்றிப் பாடும் தன்மை ஆகியவை, அவருக்கு புகழை பெற்றுத் தந்தன. அவர் பாடிய, சிந்தனை செய் மனமே, நான் பெற்ற செல்வம் முதலிய பாடல்கள், மறக்க முடியாதவை. டி.எம்.சவுந்தரராஜன் மறைந்த செய்தி கேட்டு, மிகவும் வருந்துகிறேன். அவரது குடும்பத்தாருக்கு, என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

  தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: எம்.ஜி.ஆர்., – சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், எஸ்.எஸ். ஆர்., ரஜினி, கமல் என, அனைத்து பிரபலங்களுக்கும் பாடி, சரித்திரம் படைத்தவர் டி.எம்.எஸ்., நான் நடித்த பல படங்களில், எனக்காகவும் அவர் பாடியுள்ளார். தான் எந்த நடிகருக்காக பாடினாலும், அந்த நடிகரின் முகத்தை, தன் குரலால், ரசிகர்களின் மனத்திரையில் நிற்கவைக்கும் ஆற்றல் பெற்றவர். டி.எம்.சவுந்தரராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு, தே.மு.தி.க., சார்பில், ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

  கவர்னர் ரோசையா: டி.எம்.சவுந்தரராஜனின் உணர்ச்சிபூர்வமான பக்தி பாடல்கள், நம்மை இறைநிலைக்கு கொண்டு செல்பவை. அவரது மறைவு, தமிழ் திரை துறை மற்றும் தமிழ் இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம் ; என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம் தலைப்பில் உள்ள இந்த இரண்டு வரிகளே, டி.எம்.எஸ்., என தமிழ் இசை ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட டி.எம்.சவுந்தரராஜனின் திறமையை பறைசாற்றும். தமிழ் திரை இசை உலகில் இவர் ஏற்படுத்திய தாக்கம்; அவரது ஆண்மை குரலின் வலிமை; அது தந்த சுகந்தம்; அது ஏற்படுத்திய ஆனந்தம்… தனி சகாப்தம் என்றே சொல்ல வேண்டும். இவரது குரலில் காதல் கசிந்தது; சோகம் இழைந்தது; கோபம் குமுறியது; விரக்தி வெளிப்பட்டது; அன்பு குழைந்தது. ஆக, அனைத்து நவசரசங்களையும் வெளிப்படுத்திய பாடகர், இவர் ஒருவர் தான்.

  மதுரையும் – டி.எம்.எஸ்ஸூம்

  மதுரை : மதுரையில் பிறந்தவர் டி.எம்.சவுந்திரராஜன். அவரையும், மதுரையையும் பிரிக்க முடியாது. பின்னணி பாடகருக்கு, முதல்முறையாக ரசிகர் நற்பணி மன்றம் அமைத்து மதுரையில் தான். அதுவும் டி.எம்.எஸ்.,சிற்கு தான்! மதுரை தெற்குமாசிவீதி தெற்குகிருஷ்ணன் கோவிலை சேர்ந்த மீனாட்சி அய்யங்கார் – வெங்கிட அம்மாள் தம்பதிக்கு டி.எம்.சவுந்திரராஜன், பிறந்தார். சிறுவயதிலேயே பக்தி பாடல்களை பாடும் திறன் பெற்றார். மகனின் இசை ஞானத்தை கண்டு ஆச்சரியம் அடைந்த மீனாட்சி அய்யங்கார், இசை ஆர்வத்திற்கு அச்சாரம் போட்டார். சிறு வயதில் கோயில்கள், விழாக்களில் குரல் கொடுத்து வந்த டி.எம்.எஸ்., முதல் முறையாக 1946ல் வெளியான கிருஷ்ண விஜயம் என்ற சினிமாவில், ராதை என்னை விட்டு ஓடாதடி, என்ற பாடலை பாடி ரசிகர்களின் உள்ளங்களை பரவசப்படுத்தினார். முதல் பாடலே சர்வதேச அளவில் பேச வைத்தது. அடுத்தடுத்து டி.எம்.எஸ்., பாடிய 15 ஆயிரம் பாடல்கள், இசை எனும் இமயமலைக்கு அதிபதியாக்கியது.

  சென்னையில் வசித்து வந்தாலும். அவர், அடிக்கடி மதுரைக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டார். மதுரை நரசிம்மபுரத்தில் முதல்முறையாக 1980ல் அகில இந்திய டி.எம்.எஸ்., தலைமை நற்பணி மன்றம் ஏற்படுத்தப்பட்டது. பின், இதே பகுதியில் 1986ல் மதுரை நரசிம்மபுரம் பத்மஸ்ரீ டாக்டர் டி.எம்.எஸ். ரசிகர் மன்றம் உதயமானது. இச்சங்களின் தலைவர் எம்.பி.பாலன் கூறுகையில், பின்னணி பாடருக்கு முதல்முதலில் ரசிகர் நற்பணி மன்றம் வைத்தது நாங்கள் தான். இம்மன்றங்கள் மூலம் ஆண்டு தோறும் ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறோம். டி.எம்.எஸ்ஸின் 91வது பிறந்த நாள் விழாவை மதுரையில் நடத்த இருந்தோம். அவர், உடல் நிலை சரியில்லாததால் முடியாமல் போனது, என்றார்.

  சவுராஷ்டிரா பள்ளியில் வாக்கிங் : தனலட்சுமி, சீனிவாசனை அடுத்து டி.எம்.எஸ்., பிறந்தார். இவரது இளைய சகோதரர் கிருஷ்ணமூர்த்தி, உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். மதுரையில் டி.எம்.எஸ்., இருக்கும்போது சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நண்பர்களுடன் தினமும் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவருக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ஏற்பாட்டில், கருணாநிதி தலைமையில், 2008ல் மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

  சீனிவாசனின் பேரன் டி.எஸ்.ஆர்.மணிகண்டன், கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்ற தாத்தாவின் பாடலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என தான் சொல்வேன். எங்கள் பரம்பரையில் மூத்த அவர் இறந்து விட்ட செய்தியை கேட்டதும் துவண்டு விட்டோம். எனினும், அவரது குரல் வாழ்ந்து கொண்டிருக்கிறது, என்றார்.

  டி.எம்.எஸ்ஸின் கடைசி நிகழ்ச்சி ; டி.எம்.சவுந்திரராஜன் – சுமித்ரா தம்பதிக்கு டி.எம்.எஸ்.பால்ராஜ், டி.எம்.எஸ். செல்வக்குமார் என்ற மகன்களும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். தந்தை உயிருடன் இருக்கும்போதே மகன் செந்தூரனுக்கு திருமணம் செய்ய வேண்டும், என பால்ராஜ் தீர்மானித்தார். இந்நிலையில் டி.எம்.எஸ்ஸூக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. அவரை, மருத்துவமனையில் அனுமதித்தனர். சற்று உடல் நலம் தேறிய அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் செந்தூரான், விஜயலட்சுமி திருமணம் மே 22ல் நடந்தது. அதை டி.எம்.எஸ்., முன்நின்று நடத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

  டி.எம்.எஸ் – சங்கீத மும்மூர்த்திகள் ; சங்கீத மும்மூர்த்திகள் என தியாகராஜ சுவாமிகள், முத்துச்சாமி தீட்ஷிதர், ஷியாம சாஸ்திரிகள் ஆகியோர் அழைக்கப்படுவர். இவர்களின் பெயரின் ஆங்கில முதல்எழுத்து டி எம் எஸ் என வரும். சங்கீத மும்மூர்த்திகளின் பெயர்களை எனது இன்ஷியலில் பெற்றிருப்பது நான் செய்த பாக்கியம், என டி.எம்.எஸ்., அடிக்கடி பெருமையாக கூறுவார்.

  சவுராஷ்டிரா மொழியில் கடைசி பாடல் ; வாலிபர்கள் சுற்றிய உலகம் என்ற சினிமா 2005ல் வெளியானது. இப்படத்தில் டி.எம்.சவுந்திரராஜனும், பி.சுசிலாவும் இணைந்து பாடினர். அதன் பின் சினிமாவில் டி.எம்.எஸ்., பாடவில்லை. எனினும், சவுராஷ்டிரா மொழியில் கெட்டி விடோ (நிச்சயதார்த்தம்) எனும் தலைப்பில் ரசிகர் மன்றத் தலைவர் எம்.பி.பாலன் முயற்சியில் எடுக்கப்பட்ட படத்தில் டி.எம்.எஸ்., சவுராஷ்டிரா மொழியில் பாடினார். இதுவே, அவர் பாடிய கடைசிப்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

 3. vedaprakash Says:

  டி.எம்.சௌந்தர்ராஜன் உடல் மயிலாப்பூரில் தகனம்
  By Sriram Senkottai, சென்னை
  First Published : 26 May 2013 07:29 PM IST
  http://dinamani.com/latest_news/2013/05/26/%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF/article1606968.ece

  சனிக்கிழமை நேற்று காலமான பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனின் உடல் இன்று மாலை மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

  மறைந்த டி.எம்.சௌந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

  பின்னர் இன்று மாலை 4.30 மணி அளவில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்ட அவரது உடல் மயிலாப்பூர் மயானம் நோக்கிப் புறப்பட்டது. இறுதி ஊர்வலம் சென்ற பாதையில் சாலை ஓரங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி நின்று அந்த வாகனத்தின் மீது மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாலை மயிலாப்பூர் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: