நவீனகால மயாசுரன்: ஸ்ரீ கணபதி ஸ்தபதி!

நவீனகால மயாசுரன் : ஸ்ரீ கணபதி ஸ்தபதி!


ஸ்ரீ கணபதி ஸ்தபதி வாழ்க்கை சுருக்கம்: புகழ்பெற்ற ஸ்தபதியான கணபதி ஸ்தபதி 06-09-2011 (செவ்வாய் கிழமை) அன்று மாலை சென்னைக்கு அருகே தனியார் மருத்துவமனையில் காலமானார்[1]. உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் மரு‌த்துவமன‌ை‌யி‌ல் ‌தீ‌விர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க‌ப்ப‌ட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 83.  ஸ்ரீவைத்யநாத ஸ்தபதி மற்றும் வெள்ளம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக பிள்ளையார்பட்டியில் 1927ல் பிறந்தவர். ஸ்தபதி குடும்பத்தில் பிறந்த இவர், அதே துறையில் மிகச் சிறந்த கலைஞராக சிறந்தார். காரைக்குடி அழகப்பாச் செட்டியார் கல்லூரியில் கணிதத்தில் பட்டப்படிப்பு பெற்றார். கணிதம் என்பது மனிதனின் இரண்டு கண்களில் ஒன்று என்றறிந்தே படித்தார் போலும். சிறு வயதிலேயே தனது கருத்துகளை எழுதவும் ஆரம்பித்தார். மார்ச் 13, 1957 அன்று, இவரது கட்டுரை “தி ஹிந்து” நாளிதழில் வெளிவந்தது. அதில் “ஸ்தபதி” என்ற சொல்லிற்கு விளக்கம் கொடுத்திருந்தார். அதைப் படித்த தந்தையார், மிகவும் மகிழ்ந்தார். அதே ஆண்டில் பழனி தண்டாயுத சுவாமி கோவிலின் ஸ்தபதியாக, இந்து அறநிலைத்துறையால் நியமிக்கப் பட்டார். பல்வேறு கோவில்களை, சிற்ப மண்டபங்களைக் கட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்றார்.

சிற்பக்கலைக் கல்லூரியின் முதல்வராக ஆற்றியப் பணி: மாமல்லபுரத்தில் உள்ள அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியின் முதல்வராகவும் அவர் 27 ஆண்டுகாலம் பணியாற்றினார்[2]. ராஜாஜி சிற்பக்கலைக்கு தனியாக ஒரு கல்லூரி இருக்க வேண்டும் என்று உத்தேசித்தபோது, 1957ல் திருமதி கமலா தேவி சட்டோபாத்யாய என்பவரால் இக்கல்லூரிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. திரு எம். வைத்தியநாத ஸ்தபதி தலைவராக இருந்தார். இவர் காலமானப் பிறகு, 1961ல் கணபதி ஸ்தபதி தலைவரானார். அதிலிருந்து 1988 வரை 27 வருடங்கள் அங்கு பணியாற்றினார். சிற்ப-கோவில் பணிகளுக்காகவும், ஆராய்ச்சி நிமித்தமாகவும், இவர் பல நாடுகளுக்குச் சென்றிருந்தார். அங்கிருக்கும் கோவில்-கட்டிடங்களுக்கும், இந்தியாவிற்கும் உள்ள தொடர்புகளை எடுத்துக் கட்டியுள்ளார். பத்மபூஷன்[3] உள்ளிட்ட அரசின் உயரிய விருதுகளையும் பெற்றவர்[4].

 

பரம்பரை சிற்ப வல்லுனர்: பாரதப் பண்பாட்டிற்கு ஏற்ப, இவரது குடும்பமே ஒரு சிற்பிகளின் பரம்பரையாக, கலைக்கோவிலாக இருந்து வந்தது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை அருகில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் பல இந்து கோவில்களையும் நிர்மாணித்தவர் இவர்[5]. தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தை நிர்மாணித்த குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன் பரம்பரையில் அவர் வந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுவர். 18வது நூற்றாண்டில் மருத் சகோதரர்கள் ஆதரவில் கட்டப்பட்டக் கோவில்களை, இவரது மூதாதையர் வடிவமைத்தாக கூறிக்கொள்கின்றனர்[6]. 19வது நூற்றாண்டில், நகரத்தார் ஆதரவில், இவர் பல பணிகளை செய்துள்ளார். பண்டையக் கட்டிடக்கலைக்கும் இன்றைய கட்டிடக்கலைக்குமிடையே பாலமாக விளங்கியவர் கணபதி ஸ்தபதி என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

நாத்திக-ஆத்திக உறவுகள்:  கடந்த ஆண்டுகளில், இவர் கடவுளைப் படைப்பவர்களே நாங்கள் தாம் என்ற கருத்தைச் சொல்லி வந்தார். எங்களால் தான் கோவில்கள் இருக்கின்றன, ஏன் கடவுளின் விக்கிரங்களும் இருக்கின்றன என்று கூட பேசியிருக்கிறார். ஒரு புத்தகத்தை எழுதி, கருணாநிதி மூலம் வெளியிடப் போகிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் ”நாம் நினைத்தவாறு சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமையவும், குமரியில் வள்ளுவர் சிலை எழுப்பவும் துணையாக இருந்து, அந்த பணிகளில் இரவு பகலாக கண் விழித்து வெற்றிகரமாக முடித்த கணபதி ஸ்தபதி மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சமீபத்தில் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி ஏற்படாவிட்டாலும் கூட, சில மாதங்களுக்கு ஒரு முறை எப்படியாவது என்னைச் சந்தித்து விடுவார்அவரது மறைவு தமிழகத்திற்கும், சிற்ப கலைக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் சிற்பக் கலை வல்லுனர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்[7].

கடவுளையே நான் படைத்தேன் என்றவரின் பழைய நினைவுகள்: 1999-2000களில் இத்தகைக் கருத்துகளைக் கொண்ட இவர், முன்பு இவ்விதமாகவும் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம்: “ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்-திருக்கிறாங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால மட்டும் எப்படி அத்தனை தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டு வர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனைப் பரவசப்படறீங்க? நீங்க, அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டுவரணும்னா ஒரு கல்லு சிலையா மாறணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரணும். அப்பத்தான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்குறாங்க? நாங்கதானே? எங்ககிட்ட அப்படி என்னதான் வித்தை இருக்குன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?”, என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்[8]. திக.காரர்களுக்கும் கொண்டாட்டம் தான்[9].

 

நாத்திகர்களுடான சகவாசத்தில் பிறந்த கோவில்: கருணாநிதி முதல்வராயிருந்த போது 23.04.1975ல் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அரசாங்கம் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதி தரப்படுகிறது. இறுதிக்கட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பரிந்துரையின் பேரில் மாநில அரசு மேலும் ஐந்து லட்சம் நிதி ஒதுக்கியது. 16.4.1993 அன்று கருணாநிதி இக்கோயில் திறந்து வைக்கப்பட்டறது. “தமிழ்த்தாய்” என்று சொல்லப்பட்ட சிற்பம், ஏதோ அம்மன் சிலைப் போல இருந்தது. ஒரு கையில் விளக்கு, இன்னொரு கையில் வீணை, மற்றொரு கையில் உத்திராட்ச மாலை, மற்றொரு கையில் பனையோலை என நான்கு கைகள் கொண்டு தாமரையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இக்கோயிலின் கடவுளை வடிவமைத்தவர்கள் பிரபல சிற்பிகள் கணேசன் மற்றும் கணபதி ஸ்தபதி ஆகியோர். இக்கோயில் காரைக்குடி பெரியார் சிலைக்கு அருகில் கம்பன் மணிமண்டப வளாகத்தில் அமைந்திருக்கிறது. ஆனால், அதே ஸ்தபதி, வேறு இடங்களில், வேறு மாதிரியுக் பேசியுள்ளார். உதாரணத்திற்கு, கீழ் கண்ட விஷயம்:

 

கணபதி ஸ்தபதி சிவனைப் பார்த்தாரா? “சிறு வயதில் காஞ்சிப் பெரியவரை நான் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம். 1957ல் எனது தந்தையார் சிற்பக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அப்போது திடீரென்று வாத நோய் அவருக்கு ஏற்பட்டது. இதை நான் எனது வளர்ப்புத் தந்தை கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்களிடம் கூறியபோது அவர் காஞ்சி மகா பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார்.

அப்போது சுவாமிகள் இளையாற்றங்குடியில் தங்கியிருந்தார். அது ஒரு குக்கிராமம். நான் போகும்போதே மணி இரவு ஒன்பதாகி இருந்தது. சுவாமிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, மேனேஜர் மூலம் தகவல் தெரிவித்தேன். உடனடியாக என்னை அழைத்து வரச் சொன்னார்கள். சுவாமிகளைச் சுற்றி நிறைய பக்தர்கள் கூட்டம் இருந்தது. அனைவரையும் விலக்கி என்னை அழைத்தார்கள். சுவாமிகளிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, என் தந்தையின் நிலையைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு குணமாகுமா, ஆகாதா, பலப்பல கோயில்களைக் கட்டிய இவருக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்றெல்லாம் சுவாமிகளிடம் கேட்டேன்.  சுவாமிகளோ அதற்கு பதில் ஏதும் கூறாமல், என்னைப் பற்றி, என் கல்வி பற்றி, நான் பார்க்கும் வேலை பற்றியே விசாரித்துக் கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையாகி விட்டது. தந்தையைப் பற்றி இவர் எதுவுமே கூறவில்லையே அவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ, உயிர் பிழைக்க மாட்டாரோ என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் சுவாமிகளோ திடீரென்று ‘வா என்னுடன்’ என்று கூறி விட்டு நடக்கத் தொடங்கினார்.

வெகு தூரம் நடந்து மூத்த சுவாமிகளின் அதிஷ்டானம் அருகே சென்றவர், ‘இங்கேயே இரு’ என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். நான் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தேன். மணி 12ஐக் கடந்து விட்டது. கூட்டம் கலைந்து சென்று விட்டது. நான் மட்டும் தனியே, வெளியில் காத்துக் கொண்டிருந்தேன். வெகு நேரம் சென்றிருக்கும், ‘எங்கே அந்தப் பையன்?’ என்று கேட்டுக் கொண்டே அதிஷ்டானத்தில் இருந்து வெளியில் வந்தார் சுவாமிகள். ‘இங்கே இருக்கிறேன் சுவாமி’ என்றேன் நான். சுவாமிகள் உள்ளே செல்லும் போது பாரம்பரிய தண்டத்தோடு மட்டுமே சென்றார். வரும்போது அவர் கையில் இரண்டு தேங்காய் மூடிகள் இருந்தன. வியப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிரகாரத்தின் ஒரு மூலையில் நின்று, தண்டத்தைப் பிடித்துக் கொண்ட சுவாமிகள், என் தந்தையின் நிலையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். நான் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டவர், ‘உன் அப்பாவுக்கு வந்திருப்பது பிராரப்த கர்மாவால். நீ மிகவும் அமோகமாக இருப்பாய்’ என்று சொல்லி ஆசிர்வதித்தார். இரு தேங்காய் மூடிகளையும் என்னிடம் கொடுத்து, ‘இந்த வழியாகப் போ. போகும் போது ஆஃபிஸில் போய் மேனேஜரைப் பார்த்து விட்டுப் போ’ என்றார்.

அதுவோ பயங்கரமான இருள் பிரதேசம். சுவாமிகள் சொன்ன வழியில் எப்படிச் செல்வது என்று புரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்த போது, ஒரு சிறுவன், சுமார் எட்டு வயதிருக்கும். குடுமி வைத்துக் கொண்டு முன்னால் வந்தான். முகத்தில் தெய்வீகக் களை. ‘ஸ்தபதி, இந்த வழியாக என் பின்னாலேயே வாருங்கள்!’ என்று சொல்லி நடக்கத் தொடங்கினான். எனக்கு மிகவும் ஆச்சரியம். யார் இவன், எங்கிருந்து வந்தான் என்று. ஏதாவது பேய், பிசாசாக இருக்குமோ என்று சற்று பயமாகக் கூட இருந்தது. மயானக் கரை வேறு அருகில் இருந்தது. ஆனாலும் அவன் பின்னாலேயே நடக்கத் தொடங்கினேன். அவன் உருவத்தைப் பார்க்கும்போது கோபுலு வரைந்த ஆதி சங்கரர் ஓவியம் நினைவுக்கு வந்தது. அந்த உருவமே நேரில் வந்திருப்பது போலத் தோன்றியது. சில நிமிடங்களில் மேனேஜர் இருப்பிடத்தை அடைந்ததும், அவரிடம் அந்தச் சிறுவன் ஏதோ கூறிவிட்டு இருட்டில் சென்று மறைந்து விட்டான்.

பின்னர் மேனேஜர் என்னிடம் ஒரு ரசீதில் கையொப்பமிட்டு ஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொள்ளும்படிச் சொன்னார். நான் மறுத்தேன். ‘இது சுவாமிகளின் உத்தரவு. அவசியம் வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்றார். நானும் மறுக்க மனமின்றி அதை வாங்கிக் கொண்டேன். அதன்பின் என்னை உள்ளே சென்று உணவருந்திவிட்டுச் செல்லுமாறு கூறினார். அப்போதோ நேரம் இரவு 1 மணிக்கு மேல் இருக்கும். நானும் நல்ல பசியில் இருந்தேன். உள்ளே சென்றால் சாதம், சாம்பார், ரசம் என எல்லாம் சுடச்சுட இருந்தது. சாப்பிட்டுவிட்டு, அகால வேளை என்பதால் அங்கேயே இரவு தங்கி விட்டுப் புறப்பட்டேன். பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் சுவாமிகளிடம் இதைத் தெரிவித்த போது, ‘எங்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது. நாங்கள் எல்லாம் சங்கரரைப் பற்றிப் படித்துத் தான் இருக்கிறோம். ஆனால் உனக்கு அவரைப் பார்க்கும் பாக்யமே கிடைத்திருக்கிறது’ என்று கூறி சிலாகித்தார். ‘காமகோடி’ என்ற இதழில் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். இது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம் – பத்மபூஷன் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி

தஞ்சை கோவில் “புதிர்கள்!’ வை.கணபதி ஸ்தபதி, சென்னையிலிருந்து எழுதுகிறார்[10]: “தினமலர்’ நாளிதழில் வெளியான கி.ஸ்ரீதரன் எழுதிய, “தஞ்சைப் பெரிய கோவில் சதயத் திருவிழா’ என்ற கட்டுரையைப் படித்து ஆச்சர்யம் அடைந்தேன். இன்னும் ஆச்சர்யம் அடைவதற்குரிய அனந்தம் உண்டு தான். அவை, கல்வெட்டுக்கு வராதிருக்குமானால், அதுவும் ஆச்சர்யம் தான். ஸ்ரீதரன் சம்ஸ்கிருத விற்பன்னர்; நேர்த்தியான செம்மொழியில் கட்டுரை எழுதியிருப்பதைக் கண்டு, ஆச்சர்யம் அடைகிறேன். இக்கட்டுரையில், கல்வெட்டுகள் பொறித்த, சாத்தன்குடி வெள்ளாளன் ரவிபாலூடையாருக்கு உரித்தாகும் செய்தி இனிக்கிறது. தஞ்சை மாவட்டத்திலும் சரி, தமிழகத்திலும் சரி, இந்த தஞ்சை பெருவுடையார் கோவில், இன்னும் பல ரகசியங்களைக் கொண்டுள்ளது. கருவறையில், பெருவுடையார் லிங்கத் திருமேனியாக இருக்கிறார். அதில் நிறை, குறை என்ன? இதில் குறை இருப்பதாக, பல ஆண்டுகளுக்கு முன், சிற்பியர் பலர் பேசிக் கொண்டிருந்தனர். கருவறையின் உள்சுவரைக் கீறி(சுவரை தோண்டி), அதில், “நாளம் கோமுகை’ வைத்த செய்தி உள்ளது. இது எப்படி நடந்தது? அது போல, ஏற்கனவே கட்டப்பட்ட கருவறை, லிங்கத் திருமேனிக்கு ஒத்துப்போகும் சிற்ப அளவில், ஒரு நந்தி இருந்ததை எல்லாரும் இப்போதும் பார்க்கலாம். அதை மாற்றி, புதிய நந்தி அமைத்தது ஏன்? கோவில் சாநித்யம் மிகுவதற்காகவா? ஆனால், அல்ல என்று பல பேர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோல, கோவில் முன்பக்கம், லிங்கத்துக்கும், நந்திக்கும் இடையில் தரை மட்டத்தில், 12 அடி நீளத்தில், ஒரு நீண்ட கோடு இருந்ததை, நானும், என் தந்தை சிற்பக் கலாசாகரம் வைத்தியநாதன் ஸ்தபதியும் பார்த்தோம். அதன்பிறகு இரண்டு, மூன்று ஆண்டுகள் கழித்து பார்த்தபோது, அந்தக் கல் அங்கே இல்லை. அது எங்கே? அதில் தான் ரகசியம் உள்ளது. பிற்காலத்தில் உள்ள சிற்பியர்களின் செல்வாக்கைக் குறைப்பதற்காகவும், பல பரிவாரக் கோவில்களை எழுப்பியிருக்கின்றனர் என நினைக்க இடமுள்ளது. இப்படி பல இடங்கள் சரியாக அமையவில்லை. யார் சொல்படி செய்யப்பட்டன என்பது புதிர். மற்றபடி, இன்னும் பல ரகசியங்கள் உள்ளன. இக்குறைகளை நீக்கி, “சாநித்யம்’ என்ற சொல் சொல்லப்படும் உயிர்ப்பை உண்டாக்கி, கோவில் மறுவாழ்வு பெற செய்யப்படுமா? இப்போதுள்ள பரம்பரை ராஜா இதைத் தெரிந்து, அவர்களிடமே இப்பணியைச் செய்ய, அரசு முன் வர வேண்டும்.

ஸ்தபதியின் மெய்ஞானம்: மேற்குறிப்பிட்டபடி, சில நேரங்களில் அவர் பேசியது, ஆள்பவர்களைத் திருப்திப் படுத்துவதற்காகக் கூட இருந்திருக்கலாம். ஆனால், அவரது மெய்ஞான உணர்வை மறக்க / மறுக்க முடியாது. தன்னை மயாசுரனின் வாரிசு என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். மயாசுரன், இந்திய கட்டிடக்கலை, சிற்பக்கலை, மற்ற எல்லா கட்டுமானத்துறைகளின் முதல்வன். மயாசுரன் பெயரில் பல புத்தகங்கள் இருக்கின்றன. விஸ்வகர்மா உலகத்தையே படைத்த வித்தகர்.  “இந்திய நாட்டு விஞ்ஞானக் கலாச்சாரத்தில் விசுவகர்மர்” என்ற நூலில், ஸ்தபதியே அருமையாக விளக்கியுள்ளார்[11]. அதாவது, வஸ்துவிலிருந்து வாஸ்து. எப்படி வருகிறது என்பதை இவர்கள் மெய்ப்பித்துக் காட்டியவர்கள். ஸ்தபதி அவர்கள் இதனை அடிக்கடி எடுத்து சொல்வார். E = mc2 என்று அருமையாக விளக்குவார். உலகத்தில் குழந்தைப் பிறப்பது அதாவது, பெண்ணின் வயற்றில் கரு உருவாவது தான், இந்த சூத்திரத்தின் ஆதாரம். தென்னமெரிக்காவிற்குச் சென்று திரும்பியவுடன், அங்கிருக்கும் கட்டிடங்களில், எவ்வாறு இந்திய கட்டிடக் கலையின் அடிப்படைகள் உள்ளன என்று அடுக்கடுக்காக எடுத்துக் காட்டி விளக்கினார்[12]. உண்மையில், அவரது உரைகளை இக்கால மாணவர்கள், இளைஞர்கள் முதலியோர் கேட்டிருக்க வேண்டும். ஏதோ சினிமா, கிரிக்கெட் என்று அலையும் அவர்களில் எத்தனை பேர்களுக்கு இவரைப் பற்றித் தெரியும் என்று தெரியவில்லை. அத்தகைய அஞ் ஞானத்திற்கும், நாம் தாம் பொறுப்பேற்க வேண்டும். இன்றைக்கு “சமச்சீர் கல்வி” என்று அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்நிலையில், இவர் எழுதியுள்ள புத்தகங்களில் ஒன்றைப் பரிந்துரைத்து, அதை மாணவர்கள் படித்தால், நமது கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை தெரிந்து கொள்வார்கள். அதுமட்டுமல்ல, பல கணித, வடிவியல், கட்டிடவியல், முதலியவற்றைப் பற்றியும் நன்றாகவே புரிந்து கொள்வார்கள்[13].


[8] பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி , கல்கி 11.6.2006

[11] வாஸ்து வேத ஆராய்ச்சி மையம், சென்னை நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட நூல்.

[12] V. Ganapati Sthapati, Vastu Shastra – A scientific treatise, Vastu Vedic Research Centre, B-2, Geethalaya Apartments, Tiruvanmiyur, 1996 (வெட்டுவாங்கேணியில் உள்ள தற்போதைய இல்லத்திற்கு முந்தைய விலாசம் இது).

[13] வை. கணபதி ஸ்தபதி, விண்ஞானக் கொயில்கள், சென்னை, 1995.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: